Published : 07 Apr 2022 06:03 AM
Last Updated : 07 Apr 2022 06:03 AM

சென்னையை விட கோவைக்கு சொத்து வரி விகிதம் அதிகம்: குறைத்து நிர்ணயிக்க நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

கோவை: சென்னை பெருநகர மாநகராட்சியைக் காட்டிலும் கோவை மாநகராட்சி பொதுமக்கள் கூடுதலாக சொத்து வரி செலுத்தும் நிலையைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கே.கதிர்மதியோன் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சென்னை பெருநகர மாநகராட்சியைத் தவிர, பிற அனைத்து பகுதிகளிலும் கடந்த 2008-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஆனால், சென்னையில் மட்டும் 1998-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியே வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி சரியான விகித அளவில் இல்லை.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சொத்து வரி புதுப்பிக்கப்படுகிறது. கோவை மாநகராட்சியில் 14 ஆண்டுகளுக்கு முன்பே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட சொத்து வரியையே செலுத்தி வருகின்றனர்.

உதாரணமாக, கடந்த 1998-ம் ஆண்டு 600 சதுரடிக்கு உட்பட்ட சொத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.5 ஆயிரம் சொத்து வரி விதிக்கப்பட்டது என்றால், கடந்த 2008-ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் அதே சொத்து வரியானது 25 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.6250-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக சென்னையைக் காட்டிலும் கோவை மாநகராட்சியை சேர்ந்த வரி செலுத்துவோர் தலா ரூ.17,500 கூடுதலாக சொத்து வரி செலுத்தியுள்ளனர்.

தற்போது, அதே அளவு சொத்துக்கு சென்னைக்கு 50 சதவீதமும், கோவைக்கு 25 சதவீதமும் வரி உயர்த்தப்படுகிறது என்றாலும், சென்னை பெருநகர மக்களைக் காட்டிலும் கோவை மாநகராட்சி பொதுமக்கள் கூடுதலாகவே வரி செலுத்த வேண்டிய நிலை வருகிறது. இதே நிலைதான் தொழில் நிறுவன கட்டிடங்கள், வணிக வளாக கட்டிடங்களுக்கும் வருகிறது.

தற்போது இதனை அமல்படுத்தினால், சில ஆண்டுகள் கழித்து சொத்து வரி புதுப்பிக்கப்படும்போது, மீண்டும், மீண்டும் சென்னையைத் தவிர பிற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூடுதலாக வரி செலுத்தும் நிலையே தொடரும்.

இதனைத் தவிர்க்க, கோவை மாநகராட்சியில் விதிக்கப்படும் வரியின் அளவில் உரிய மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 600 சதுரடிக்கு குறைவான கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத அளவை 20 சதவீதமாகவும், 1200 சதுரடிக்கு 50 சதவீதம் என்பதை 40 சதவீதமாகவும், 1800 சதுரடிக்கு 75 சதவீதம் என்பதை 60 சதவீதமாகவும் குறைக்க வேண்டும். 1800 சதுரடிக்கு மேற்பட்டவைக்கு 100 சதவீதம் உயர்த்தலாம்.

தொழில் நிறுவன கட்டிடங்களுக்கு 75 சதவீதம் என்பதை 30 சதவீதமாகவும், வணிக வளாக கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என்பதை 40 சதவீதமாகவும் நிர்ணயம் செய்தால் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சிக்கு நிகரான சொத்து வரியாக கருத முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x