Published : 07 Apr 2022 07:51 AM
Last Updated : 07 Apr 2022 07:51 AM

விவசாயிகளுக்கு பாதிப்பின்றி தொழிற்பூங்காக்களுக்கு நிலம் எடுப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல், தொழிற்பூங்காக்களுக்கு நிலம் எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், சூலூர் எம்எல்ஏ வி.பி.கந்தசாமி ஆகியோர் தொழில் பூங்கா தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, ‘‘ தொழில் வளர்ச்சிக்கு தொழிற்பூங்காக்கள் அமைக்க வேண்டியது அவசியம். இவ்வாறு தொழிற்பூங்கா அமைக்கும்போது, நிலம் கையிருப்பு, போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் வசதிகள் மற்றும் தொழில் மனைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, பூங்காக்களுக்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் தொழில் வளர்ச்சி கொண்ட மாவட்டம். இங்கு சிப்காட் மூலம் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். தொழில் பூங்காக்களுக்கு நிலம் அவசியம்.

கோவையில் பாதுகாப்புத் துறை தொடர்பான தொழில் தடம்வரும்போது, பாதுகாப்பு சம்பந்தமான தொழில் நிறுவனங்கள் வர வாய்ப்பு உள்ளது. டெல்லியில் பாதுகாப்பு அமைச்சரை முதல்வர் சந்தித்தபோது, கோவையில் பாதுகாப்பு தொழில் தடம் அமைப்பது குறித்து வலியுறுத்தினார். எனவே, சூலூரில் 500 ஏக்கரில், பாதுகாப்பு தொழில் தடத்தில் புதிய தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

அதேசமயம், தொழிற்பூங்காக்களை உருவாக்க நிலம் எடுக்கும்போது, விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் அரசு அக்கறையுடன் உள்ளது. கோவை மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் நிலம் எடுப்பதில் உள்ள பிரச்சினைகள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்குப் பாதிப்பின்றி நிலம் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தொழில் துறை மேற்கொள்ளும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x