

சென்னை: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸை ரத்து செய்வதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி புகாரில் அகில பாரத சத்திரிய மகா சபா அமைப்பின் நிர்வாகி கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (50). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், அவர் கூறியிருந்ததாவதுச; காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேன்பவர் அவுட்சோர்சிங் தொழில் செய்து வருகிறேன். இந் நிறுவனம் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்துக்கு மார்ச் 2021ல் ஜிஎஸ்டி தொடர்பாக சோதனை செய்ய சீனியர் அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டு 2017-18 மற்றும் 2019-20, நிதி ஆண்டில் ரூ.4.75 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டினர். மேலும், அத்தொகையை உடனடியாக செலுத்த நோட்டீஸ் கொடுத்து சென்றனர்.
இந்நிலையில், சென்னை நங்கநல்லூர், நேரு நகரைச் சேர்ந்த தணிகைவேல் (47) என்பவர் தன்னிச்சையாக அறிமுகமாகி தனக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளைத் தெரியும் என்று கூறியதோடு, உங்களுக்கு கொடுத்த நோட்டீஸை ரத்து செய்வதாக கூறினார்.
மேலும் இது தொடர்பாக சென்னையில் உள்ள வருமானவரித் துறை ஆணையரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார். மேலும், ரூ.1 கோடி கொடுத்தால் ஜிஎஸ்டி அதிகாரிகள் கொடுத்த வரி ஏய்ப்பு நோட்டீஸை ரத்து செய்ய வைப்பதாகக் கூறியதை நம்பி பல்வேறு தவணைகளில் தணிகவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரிடம் ரூ.1 கோடி கொடுத்தேன்.
பணம் கொடுத்த பிறகும் ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகத்தில் இருந்து தொடர்ச்சியாக நோட்டீஸ் வந்தது. இதன் பிறகே நான் ஏமாற்றப்பட்டதை உணந்தேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னிடம் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், பண மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான தணிகைவேல்,அவரது கூட்டாளி கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் கோதாரி ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தணிகைவேல் அகில பாரத சத்திரிய மகா சபா அமைப்பின் பொருளாளராக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.