Published : 07 Apr 2022 08:06 AM
Last Updated : 07 Apr 2022 08:06 AM
செம்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மூடு கால்வாய் பணிக்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாகப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நிபுணர் குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் மூடு கால்வாய் அமைக்கப்பட்டு நேரடியாக செம்பாக்கம் ஏரியில் மழைநீர் கலக்கும் வகையில் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த பணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கத்தினர், மாமன்ற உறுப்பினர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ராஜகீழ்ப்பாக்கம் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் செல்லும் பகுதியிலேயே இந்த கால்வாய் அமைக்கப்படுவதால் மீண்டும் மழைநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே பணியைச் செய்யக் கூடாது என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, அதிகாரிகள் தற்காலிகமாக பணியை நிறுத்தி வைத்துள்ளனர். நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பின்னர் பணி நடைபெறும் எனப் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தனர்.
இதுகுறித்து செயற்பொறியாளர் டெப்சி ஞானலதா கூறியதாவது: பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் தற்போது பொறியாளர், பொதுப்பணித் துறை, மாநகராட்சி ஆணையர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT