Last Updated : 08 Apr, 2016 11:02 AM

 

Published : 08 Apr 2016 11:02 AM
Last Updated : 08 Apr 2016 11:02 AM

நாகர்கோவில், வேதாரண்யம், தி.நகரில் பாஜக நெருக்கடியை சமாளிக்க வேட்பாளர்களை மாற்றிய ஜெயலலிதா

கடந்த 4-ம் தேதி 227 தொகுதி களுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளி யிட்டார். பட்டியலில் இடம்பெற்ற பலர் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால், நாள்தோறும் வேட்பாளர்கள் மாற் றப்பட்டு வருகின்றனர். கடந்த 3 நாளில் 5 முறை அதாவது 13 வேட்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில், வேதாரண்யம், தியாகராய நகர் தொகுதிகளின் வேட்பாளர்களும் மாற்றப்பட்டனர். பாஜகவின் நெருக்கடியை சமாளிக் கவே இங்கு வேட்பாளர்களை ஜெய லலிதா மாற்றியதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் தொகுதியில் பாஜக சார்பில் எம்.ஆர்.காந்தி போட்டியிடுகிறார். பாஜக மூத்த தலைவரான இவருக்கு கட்சியிலும், குமரி மாவட்ட மக்களிடமும் செல்வாக்கு உண்டு. ஏற்கெனவே ஒருமுறை குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 589 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இவருக்கு எதிராக அதிமுக சார்பில் மாவட்ட மகளிரணிச் செயலாளர் வி. டாரதி சேம்சன் அறிவிக்கப்பட்டிருந்தார். இதனால் எம்.ஆர்.காந்திக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து டாரதி சேம்சன் மாற்றப்பட்டு தற்போதைய எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீண்டும் நிறுத்தப் பட்டுள்ளார். இந்து வாக்குகள் பிரியும் என்பதால் பாஜகவுக்கு இங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் பாஜக சார்பில் எஸ்.கே.வேதரத்தினம் போட்டியிடுகிறார். இவர் 1996, 2001, 2006 ஆகிய 3 முறை இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2011-ல் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப் பட்டது. இதனால் திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டு 42 ஆயிரத்து 871 வாக்குகளைப் பெற்றார்.

ஆனால், இங்கு அதிமுக சார்பில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆர்.கிரிதரன் வேட்பாளராக அறி விக்கப்பட்டார். அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு வேதரத்தினம் கடும் சவாலை ஏற்படுத்துவார் என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரிதரன் மாற்றப்பட்டு, அப்பகுதியில் செல்வாக்கு மிக்க ஓ.எஸ்.மணியன் நிறுத்தப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகர் தொகுதியில் பிராமண சமுதாயத் தினர் அதிகம் உள்ளனர். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட தியாகராய நகரில் பாஜக வேட்பாளர் இல.கணேசன் 41,364 வாக்குகளைப் பெற்றார். திமுகவைவிட 8,184 வாக்குகள் அதிகமாக பாஜக பெற்றது. இந்தத் தேர்தலில் அத்தொகுதி யில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா

களமிறங்கியுள்ளார். ஆனால், அதிமுக சார்பில் கட்சியினருக்கே அதிக நெருக்கம் இல்லாத தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி நிறுத்தப்பட்டிருந்தார். இதனால் அதிமுக, திமுகவுக்கு பாஜக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என செய்திகள் வந்தன. அதைத்தொடர்ந்து சரஸ்வதி ரெங்கசாமி மாற்றப்பட்டு தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.சத்தியநாராயணனை ஜெயலலிதா நிறுத்தியுள்ளார்.

மற்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மாற்றத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இந்த 3 தொகுதிகளில் பாஜக நெருக்கடியை சமாளிக்கவே பலம் வாய்ந்த வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x