

ரூ.12 கோடி மதிப்புள்ள மரகத கல்லைத் திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (66). இவர் அப்பகுதியில் டைமண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் வைத்துள்ளார். ஆன்மீக ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வந்தார். இவர் தன்னிடம் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள மரகத கல்லை விற்பனை செய்வது தொடர்பாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். அந்த விளம்பரத்தைப் பார்த்து, கல்லை விற்றுத் தருவதாக கூறி அவரிடம் வந்த 6 இளைஞர்கள், மகேஸ்வரனை ஏமாற்றி அதை திருடிச் சென்றனர்.
இதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் மகேஸ்வரன் புகார் அளித்தார். அந்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். மரகதக் கல்லை திருடியவர்களைப் பிடிக்க வடபழனி உதவி கமிஷனர் எ.சுப்பராயன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனிசெல்வம், குமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் மோசடியில் ஈடுபட்ட ராஜா (24), சக்திகுமார் (24), சையத்ரிஸ்வான் (26), சலீம் (28), சபீர் (25), பாபா (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள மரகத கல் மீட்கப்பட்டது. கைதான 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த மோசடி தொடர்பாக மகேஸ்வரன் கூறியதாவது:
நான் கடந்த 22 ஆண்டுகளாக வைரம் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகிறேன். இதற் காக பல நாடுகளுக்கு சென்றுள் ளேன். ஆந்திர மாநிலம் அனுமந்தபுரத்துக்கு சென்ற போது, எனக்கு அந்த கல் கிடைத்தது. எனக்கு கடன் இருந்ததால், அந்த கல்லை விற்க முடிவு செய்தேன். அதனால் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்தேன். ஆனால், என்னை ஏமாற்றி 6 பேரும் அந்த கல்லை திருடிச்சென்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “பூமிக்கு அடியில் இருக்கும் அனைத்து வளங்களும் அரசுக்கு சொந்தம். சட்டப்படி மகேஸ்வரன் அந்த கல்லை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இது ஆந்திராவிலிருந்து எடுத்து வந்ததால், அந்த அரசும் இந்த கல்லுக்கு உரிமை கோரலாம். இது தமிழ்நாட்டுக்கு சொந்தமா, ஆந்திராவுக்கு சொந்தமா என்று நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி முடிவு செய்யப்படும். இந்த கல் தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்” என்றனர்.
கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகள்.