சோதனை முயற்சி வெற்றி பெற்றதால் செயலி மூலம் மின்கட்டணம் கணக்கீடு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு

சோதனை முயற்சி வெற்றி பெற்றதால் செயலி மூலம் மின்கட்டணம் கணக்கீடு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு
Updated on
1 min read

சென்னை: வீடுகளில் மின்கட்டணத்தைக் கணக்கெடுத்து உடனடியாக நுகர்வோருக்கு தெரிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலியின் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. இதற்காக, மின்வாரிய ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுத்து அதை நுகர்வோர் வைத்துள்ள அட்டையில் எழுதி தர வேண்டும். மேலும், அந்த விவரங்களை மின்வாரியத்தின் கணினியிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதன் மூலம், சம்பந்தப்பட்ட நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு மின்கட்டண விபரம், செலுத்த வேண்டிய கடைசி தேதிஆகிய விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்நிலையில், இதற்கு மாற்றாக மின்பயன்பாட்டைக் கணக்கெடுத்ததும் உடனடியாக கட்டணத்தைத் தெரிவிக்க மொபைல்செயலியை மின்வாரியம் அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இந்தச் செயலி, மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க செல்லும் ஊழியர்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்து தரப்படும். அதனுடன் மீட்டரையும், மொபைல் போனையும் இணைக்கும் கேபிளும் வழங்கப்படும்.

இதன் மூலம், கணக்கீட்டாளர் மின்பயன்பாட்டைக் கணக்கெடுத்து செயலியில் பதிவிட்டால், உடனே அதற்கான கட்டணம் கணக்கிடப்பட்டு மின்வாரிய சர்வர் மற்றும் நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இந்தச் செயலி பரிசோதனை அடிப்படையில் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டது. இச்சோதனை வெற்றி பெற்றுள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in