Published : 06 Apr 2022 05:25 AM
Last Updated : 06 Apr 2022 05:25 AM

மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: கூட்டத்தை மே 10 வரை நடத்த திட்டம்

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

தமிழகத்தின் இந்த 2022-23-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 18-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மறுநாள் மார்ச் 19-ம் தேதி அரசின் 2-வது வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாளில், நிதி மற்றும் வேளாண் அமைச்சர்கள் விவாதத்துக்கு பதிலளித்து பேசினர்.

நீர்வளத் துறை

வழக்கமாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், தமிழக அரசின் 30-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். அதன்படி, இன்று முதல் மானிய கோரிக்கை விவாதங்களுக்கான சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. முதல் நாளான இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

22 அலுவல் நாட்கள்

முன்னதாக, கடந்த மார்ச் இறுதியில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், மே 10-ம் தேதி வரை 22 அலுவல் நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் துறைதோறும் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.

அதேநேரம், சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு மசோதா, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவைக் கூட்டத்தில் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வரும் நாட்களில் கேள்வி பதில் நேரம் மற்றும் முதல்வரின் 110-வது விதியின் கீழ் அறிவிப்புகள், அமைச்சர்களின் பதிலுரைகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x