

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சாஎண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி முதல் விலை உயர்வு அமலானது. அதன்பிறகு தினமும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் சிலவற்றில் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டிய நிலையில், சென்னையிலும் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது.
தொடர்ந்து 13-வது நாளாக சென்னையில் நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 75 காசு உயர்ந்து ரூ.110.09-க்கும்,டீசல் 76 காசு உயர்ந்து ரூ.100.18-க்கும் விற்பனையாகிறது. கடந்த 13 நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8.69, டீசல் விலை ரூ.8.75 உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே, வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால், ஓட்டல்களில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதால், லாரி வாடகை கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. இதனால், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.