Published : 06 Apr 2022 06:00 AM
Last Updated : 06 Apr 2022 06:00 AM

தமிழகத்தில் சொத்து வரியைத் தொடர்ந்து பேருந்து, குடிநீர், மின் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்: பழனிசாமி குற்றச்சாட்டு

திருச்சி: சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து பேருந்து, குடிநீர், மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றையும் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே காதி கிராப்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி பேசியதாவது:

சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கூறவே இல்லை. ஆனால், மத்திய அரசு மீது பழியைச் சுமத்தி, சொத்து வரியை திமுக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.

2 ஆண்டுகளாக கரோனாவால் மக்கள் வேலையின்றி, வருமானமின்றி அவதிப்பட்டு வரும் சூழலில், சொத்து வரியை 150 சதவீதம் வரை திமுக அரசு உயர்த்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.

கடந்த 10 மாத கால ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல், அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தற்போது ரிப்பன் வெட்டி திறந்துவைக்கிறார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக அரசு முன்னெடுத்த கோதாவரி - காவிரி இணைப்பு, காவிரி - குண்டாறு இணைப்பு ஆகிய திட்டங்களை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறை செயலிழந்துவிட்டது. கிராமம் முதல் நகரம் வரை எங்கு பார்த்தாலும் போதைப் பொருள், கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது.

திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அனைத்து துறைகளிலும் முறைகேடு, லஞ்சம் பெருகிவிட்டது. அரசு அதிகாரியை சாதியைக் குறிப்பிட்டு திட்டியதாக எழுந்த புகாரின் பேரில் தொடர்புடைய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல், துறையை மாற்றியதுதான் சமூக நீதியா? திராவிட மாடலா?

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், 3 அனல்மின் நிலையங்கள் நிலக்கரி இல்லாமல் மூடப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு திமுக அரசின் நிர்வாகம் உள்ளது. வருங்காலங்களில் கடுமையான மின் வெட்டு வரும்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு துன்பம் இல்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின். திமுக ஆட்சியில் இருப்பதே மக்களுக்கு துன்பம்தான்.

உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் வெற்றி பெற வைத்ததற்கு பரிசாக சொத்து வரியை உயர்த்தியுள்ளனர். அடுத்து பம்பர் பரிசாக பேருந்து, குடிநீர், மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றையும் விரைவில் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மக்கள் விரோத திமுக அரசுக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, வெல்லமண்டி என்.நடராஜன், அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல், எஸ்.வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் ஓபிஎஸ் பேச்சு

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

‘கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் நிலையான இடத்துக்கு வரும் வரை சொத்து வரி உயர்த்தப்படாது’ என்று தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியது. அதை காற்றில் பறக்கவிட்டு, மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது.

2018-ல் சொத்து வரி உயர்த்தப்பட்டபோது, அதை ரத்து செய்யவேண்டும் என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வலியுறுத்தினார். பின்னர், மக்கள் நலன் கருதி 2019-ல் வரி உயர்வு திரும்பப் பெறப்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்ததும், அவரது சுயரூபம் வெளியே தெரிகிறது.

சொத்து வரி உயர்வை திமுக அரசு திரும்ப பெறவேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் வெடிக்கும். மக்களின் கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்க்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பா.வளர்மதி, மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல, அனைத்துமாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x