

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபி பங்களாபுதூரை அடுத்த துறையம்பாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி(55). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர், பல்வேறு பகுதிகளுக்கு தொழில்ரீதியாக சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி வீடு திரும்பவில்லை, மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 31-ம் தேதி, சத்தியமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக மூர்த்தியின் குடும்பத்துக்கு தகவல் கிடைத்தது. குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, முகம் அழுகிய நிலையில், மூர்த்தியைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் இறந்து கிடந்ததால், அந்த உடலைப் பெற்று, துறையம்பாளையம் எடுத்து வந்து உரிய சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், மூர்த்தி நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பியதால் அவரது மகன்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில், கரும்பு வெட்டும் பணிக்கு சென்றதாகவும், அங்கு தங்கி வேலை பார்த்துவிட்டு, தற்போது ஊர் திரும்பியதாகவும் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீஸார், மூர்த்தி எனக் கருதி அடக்கம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.