பினாமி பரிவர்த்தனை தடை சட்ட தீர்ப்பாயத்தில் அரசு அதிகாரிகள் நீதித்துறை உறுப்பினர்களாக முடியாது: சட்ட திருத்தத்தை ரத்து செய்தது நீதிமன்றம்

பினாமி பரிவர்த்தனை தடை சட்ட தீர்ப்பாயத்தில் அரசு அதிகாரிகள் நீதித்துறை உறுப்பினர்களாக முடியாது: சட்ட திருத்தத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: பினாமி பரிவர்த்தனை தடை சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகளையோ அல்லது வழக்கறிஞர்களையோ மட்டுமே நியமிக்க முடியும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், நீதித்துறை உறுப்பினர்களாக அரசு அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்யும் சட்ட திருத்தத்தை ரத்து செய்துள்ளது.

பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்களாக இந்திய சட்டப் பணிகள் துறையில் அதிகாரிகளாக பணியாற்றுபவர்களை நியமிக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது சட்ட அனுபவம் இல்லாதவர்களை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது என்றும், அவ்வாறு நியமிக்க முடியாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இதுபோன்ற மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் நீதித்துறை உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகளையோ அல்லது வழக்கறிஞர்களையோ மட்டுமே நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2011-ல் தீர்ப்பளித்துள்ளது. எனவே பினாமி தடைச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு நீதித்துறை உறுப்பினர்களாக அரசு அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்யும் சட்டத் திருத்தம் செல்லாது. அது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் அதை ரத்து செய்கிறோம். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இதுதொடர்பாக மத்திய அரசு புதிதாக சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in