Published : 06 Apr 2022 06:25 AM
Last Updated : 06 Apr 2022 06:25 AM
உடுமலை: உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் அச்சங்கத்தின் செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உடுமலை அருகே உள்ள சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் மூலம் நகைக்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு சான்று விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையை காட்டிலும், கூடுதல் தொகை பெற்றதாகவும், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் ரசீது மூலம் தெரியவந்தது. இதேபோல 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயரில் கடன் தள்ளுபடி மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதையடுத்து கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவின் பேரில், சங்கத்தின் செயலாளர் தண்டபாணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கு தனி அலுவலர் மூலம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன் குடிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திலும் மோசடி புகார் எழுந்ததால், அங்கு பணியாற்றி வந்த எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இதர கூட்டுறவு சங்கங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT