

மரக்காணத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் இறால் பண்ணை களை மூட உத்தரவிடப் பட்டிருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் கூறியிருப்பதாவது: மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உரிய அனுமதியின்றி உப்புநீர் இறால் பண்ணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கடலோரப் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக அப்பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு 75 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளை கடந்த ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் அழிந்து வருகின்றன. அங்கு பறவைகள் வரத்தும் குறைந்துவிட்டன. அதனால் அப்பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை மூட வேண்டும். அப்பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து, பழைய நிலைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த அமர்வு, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது: மரக்காணம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் இயங்கும் 32 இறால் பண்ணைகளை மூட வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வனப்பகுதியை ஆக்கிரமித்து இயங்கி வரும் 101 இறால் பண்ணைகளை மூட வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பட்டா இடத்தில் இயங்கும் 195 இறால் பண்ணைகளை மூடவும், விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணை களுக்கு இறால் முட்டைகளை வழங்க கூடாது என்று 29 பண்ணை களுக்கும் மீன்வளத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மரக்காணம் பகுதியை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ரூ.30 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இதை பதிவு செய்துக்கொண்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான விசாரணையை ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.