

சென்னை: தமிழகத்தில் வரும் நிதியாண்டில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை வளசரவாக்கம் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களுக்கான மருத்துவக் கருவிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஒவ்வொரு நாளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 2 புதிய அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
அறிவிப்பு எண் 61-ன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர், புழல், ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பாடி, அயனாவரம், வடபழனி, போரூர் உள்ளிட்ட 10 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு ரூ.1.10 கோடியில் கர்ப்பிணிகளின் பரிசோதனைக்கான 10 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் உள்ள அதிநவீன வசதிகளை அரசு மருத்துவமனையிலும் கொண்டுவர வேண்ண்டும் என்ற நோக்கில் இவை வழங்கப்பட்டுள்ளன.
அறிவிப்பு எண் 67-ன்படி,38 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.56.62 லட்சத்தில் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோமீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா பரவலுக்கு பிறகு, நுரையீரல் செயல்பாடு பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், இக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 2021-22 ஆண்டில் ரூ.88 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வரும் நிதி ஆண்டில் தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் கரோனா தொற்று புதிதாக ‘சீஸ்’ வைரஸ் தொற்றாக உருமாறியுள்ளது. இது ஒமைக்ரான் தொற்றைவிட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. சர்வதேச விமான நிலையங்களில் காய்ச்சல் முகாம்கள் மூலம் வெளிநாட்டு பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
இரண்டு சதவீத உத்தேசஅடிப்படையில் கரோனா பரிசோதனையும் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் முதல் தவணைதடுப்பூசி 92 சதவீதத்தையும், 2-வது தவணை 76 சதவீதத்தையும் கடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இங்கிலாந்தில் கரோனா தொற்று புதிதாக ‘சீஸ்’ வைரஸ் தொற்றாக உருமாறியுள்ளது. இது ஒமைக்ரான் தொற்றைவிட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.