Published : 06 Apr 2022 06:19 AM
Last Updated : 06 Apr 2022 06:19 AM
நாகர்கோவில்: அணைகள், குளங்கள் வற்றிவரும் நிலையில், கோடை மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. வெயிலுக்கு இதமாக குளியலிட திற்பரப்பில் மக்கள் குவிகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் கடுமையாக உள்ளது. மழை இல்லாததால் அணைகள், குளங்களில் நீர்மட்டம்குறைந்தது. கடந்த 31-ம் தேதி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை அணை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மலையோரம், அணைப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.நேற்று முன்தினமும், நேற்றும் பலத்த மழையாக இருந்தது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 59 மிமீ மழை பதிவானது.
சிற்றாறு ஒன்றில் 48 மிமீ,பெருஞ்சாணியில் 39, புத்தன்அணையில் 37, இரணியலில் 28, சிவலோகத்தில் 26, மாம்பழத்துறையாறில் 26, அடையாமடையில் 23, சுருளகோட்டில் 20, களியலில் 18, பாலமோரில் 17, நாகர்கோவிலில் 20, குளச்சலில் 18, குருந்தன்கோட்டில் 16 மிமீ மழை பெய்திருந்தது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர்மிதமாக கொட்டுகிறது. வெயில்காலத்தில் தண்ணீர் கொட்டுவதால், திற்பரப்புக்கு சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துள்ளது. அருவியில் குளித்தும், அருகே உள்ள நீச்சல் குளத்தில் நீந்தியும் மக்கள் மகிழ்கின்றனர்.
திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் உள்ள தடுப்பணையை கடையால் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்கு படகு சவாரி நடைபெற்று வந்தது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுவர். ஆனால், கடந்த சில நாட்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. கடையால் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குத்தகை காலம் நிறைவடைந்த நிலையில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்த குத்தகை மாற்றப்பட்ட பின்னரே சவாரி தொடங்கும் எனத் தெரிகிறது.
கோடை காலத்தில் அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் தடுப்பணையில் படகு சவாரிநிறுத்தப்பட்டிருப்பது ஏமாற்றமடையச் செய்துள்ளது. படகு சவாரியை விரைந்து தொடங்க வேண்டும் என திற்பரப்பு வரும் மக்கள்தெரிவிக்கின்றனர். பேச்சிப்பாறை அணையில் 37 அடி, பெருஞ்சாணியில் 19, முக்கடல் அணையில் 14, பொய்கையில் 20, சிற்றாறுஒன்றில் 7.90, சிற்றாறு இரண்டில் 8 அடி தண்ணீர் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT