Last Updated : 06 Apr, 2022 01:04 AM

 

Published : 06 Apr 2022 01:04 AM
Last Updated : 06 Apr 2022 01:04 AM

10 சதவீதம் கமிஷன்; ரூ.5 லட்சம் முன்பணம் - லஞ்சம் வாங்கிய குமரி டி.எஸ்.பி அதிரடி கைது

நாகர்கோவில்: குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவில் புன்னைநகரை சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம்(66). இவர் நிலம் வாங்குவதற்காக நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் முன்பணமாக ரூ.1.50 கோடி பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆன பின்பும் நிலத்தை சிவகுரு குற்றாலத்திற்கு கொடுக்காமல் அவர் இழுத்தடித்துள்ளார். இதனால் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த சிவகுரு நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தங்கவேலிடம்(52) புகார் அளித்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரித்த டி.எஸ்.பி. தங்கவேலு நிலம் தொடர்பாக பணம் பெற்றவரை அழைத்து பேசியுள்ளார். பணத்தை திருப்பி கொடுக்குமாறும், இல்லையெனில் கைது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அவர் சிவகுரு குற்றாலத்திடம் ஒன்றரை கோடி பணத்தையும் திரும்ப கொடுத்துள்ளார். பணம் திரும்ப கிடைத்ததை தொடர்ந்து சிவகுரு குற்றாலத்தை அழைத்து பேசிய டி.எஸ்.பி. தங்கவேலு, தன்னால் தான் ஒன்றரை கோடி பணமும் திருப்பி கிடைத்தது. இதனால் அதற்கு 10 சதவீத தொகையான ரூ.15 லட்சம் தனக்கு வேண்டும் என கேட்டுள்ளார்.

பணத்தை கொடுக்க விரும்பாத சிவகுரு குற்றாலம் கண்டுகொள்ளாததால், அவரை டி.எஸ்.பி. தொடர்ந்து மிரட்டல் தொனியில் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிவகுரு குற்றாலம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து 2 ஆயிரம், 500 ரூபாய்கள் அடங்கிய ரூ.5 லட்சம் பணத்தை ரசாயனம் தடவி வழங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸார், அந்த பணத்தை முதல் தவணையாக கொடுப்பதாகவும், மீதி பணத்தை பிறகு வழங்குவதாகவும் கூறி டி.எஸ்.பி.யிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

அதன்படி நேற்று மாலையில் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு பணத்துடன் சிவகுரு குற்றாலம் சென்றுள்ளார். அவர் டி.எஸ்.பி. தங்கவேலுவிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை அவர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் டி.எஸ்.பி. தங்கவேலுவை கையும் களவுமாக பிடித்தனர்.

பணத்தை பறிமுதல் செய்ததுடன் கடமையை செய்வதற்காக மிரட்டி பணம் பறித்ததாக டி.எஸ்.பி. தங்கவேலு மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் நாகர்கோவிலில் உள்ள தங்கவேலுவின் வீடு, அவரின் சொந்த ஊரான கோவையில் உள்ள வீடு, உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்திற்குள்ளேயே லஞ்சம் வாங்கும்போது டி.எஸ்.பி. கைது செய்யப்பட்ட சம்பவம் போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x