டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூடும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூடும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மதுபாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் பார் உரிமையாளர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி சி.சரவணன் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேநேரம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். மேலும், தனது உத்தரவில்,1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் மேலும் அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்று தெரிவித்துள்ளார். மதுவிலக்கு சட்டப்படி மதுபான கடைகளோடு தின்பண்ட கடைகள் மற்றும் பார்கள் அமைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்பண்டாரி , நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், வழக்கிற்கு அப்பாற்பட்டு இந்த உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்துள்ளதார். மனுதார்கள் யாரும் பார்களை மூட வேண்டும் என்று கேட்கவில்லை. எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், டாஸ்மாக் நிறுவனத்திற்கு பார்களை நடத்த அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, டாஸ்மாக் நிறுவனம் பார் நடத்த டெண்டரை கோரலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in