Published : 05 Apr 2022 04:55 PM
Last Updated : 05 Apr 2022 04:55 PM

வடிவேலு காமெடி போல திமுக ஆட்சி: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ ஒப்பீட்டு விமர்சனம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: வடிவேல் காமெடி போல் தேர்தலுக்கு முன்பு பயபக்தியுடன் வாக்கு சேகரித்த திமுக, ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

சொத்து வரி உயர்வைக் கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பெத்தானியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ராஜா, பொருளாளர் அண்ணாதுரை உட்பட அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, "வடிவேலு காமெடியை போல திமுக ஆட்சி நடக்கிறது. பயபக்தியுடன் காலையில் கிளம்பும் வடிவேலு இரவில் மதுபானம் அருந்திவிட்டு வருவது, போல வாக்கு சேகரிக்கும்போது பயபக்தியுடன் வந்த திமுக தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு மக்கள் நலனில் அக்கறை காட்டாது உள்ளது.

திமுக ஆட்சியில் விலைவாசி எல்லாவற்றிலும் உயர்கிறது. கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்த மதுரையைச் சேர்ந்தவர் அமைச்சராக உள்ளார். அவருக்கு ஏழை, எளிய மக்கள் நிலை தெரியுமா? அதனால்தான் விலை வாசி உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு பணம், பொருள் என மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் வழங்கினோம். சொத்து வரி உயர்வை தி.மு.க அரசு அதிகப்படுத்தியுள்ளது.

பெண்களுக்கும், மாணவர்களுக்கும் இலவச பேருந்து என கூறிவிட்டு சில பேருந்துகளை மட்டும்தான் அளிக்கின்றனர். எப்படிப் பார்த்தாலும் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பசி, பட்டினி, வறட்சி ஏற்படுகிறது. தெர்மகோல் திட்டம் பொறியியல் செயல்படுத்தியது தவறு, அதைக் கிண்டல் செய்தார்கள். ஆனால் மின்சாரத்தில் அணில் சென்றதையோ, அமைச்சர் பிப்ரவரி என்று சொன்னதெல்லாம் கிண்டல் செய்யவில்லை. மதுரைக்காரர்கள் சொன்னால் அதற்கு மட்டும் கிண்டலா?

திமுக ஆட்சியில் பாலியல் தொல்லை, கட்ட பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது. போலீஸுக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவோம்" என்று செல்லூர் ராஜூ கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x