

ஆந்திரத்தில் கெயில் நிறுவன கேஸ் குழாய் வெடித்து 14 பேர் பலியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க மாற்றுப் பாதைதான் சரியானது என்பது உறுதியாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திரத்தில் கெயில் நிறுவன கேஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டு 14 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கெயில் நிறுவனம் கொச்சி முதல் கோவை மாவட்டம் வழியாக திருப்பூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் கிராமப்புற விவசாய நிலங்கள் வழியாக நில உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி குழாய் பதிப்பதை பரிசீலிக்க மறுத்து வருகிறது. தமிழக விவசாயிகள் தங்கள் நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கப்பட்டால் விபத்து ஏற்படும் என்று அச்சப்பட்டதுபோல், தற்போது ஆந்திரத்தில் விபத்து ஏற்பட்டு 14 பேர் பலியாகியுள்ளனர். விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
எனவே, தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டத்தை விவசாய நிலங்களை தவிர்த்து மாற்று வழியில் கொண்டு செல்ல பரிசீலிக்க வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மாற்றுப் பாதையை உறுதியாக வலியுறுத்த வேண்டும் என்றார்.