

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பெரியகொழுவாரி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து பாரவையிட்ட முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளிடம் வழங்கினார்.
வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகொழுவாரி கிராமத்தில் புதிதாக பெரியார் நினைவு சமத்துவபுரம் கடந்த மாதம் கட்டி முடிக்கப்பட்டது.
இங்கு கழிவறை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 100 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இத்னை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
முன்னதாக சமத்துவபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமத்துவப்புரம் வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் ஒருவருக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார்.
மேலும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய அலுவலகக் கட்டிடம், அன்னியூர் ஊராட்சி அலுவலகக் கட்டிடம், காணை ஊராட்சி அலுவலகக் கட்டிடம், சி.என் பாளையம் ஊராட்சி அலுவலகக் கட்டிடம், கஞ்சனூர் ஊராட்சியில் தானிய கிடங்கு, ஆசாரங்குப்பம் ஊராட்சி அலுவலகக் கட்டிடம், தென்னமாதேவி ஊராட்சி அலுவலகக் கட்டடம், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டிடம்
என மொத்தம் 24 கோடியே 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை முதல்வர் திறந்துவைத்தார்.
பின்னர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பால்வளத்துறை, தாட்கோ, கூட்டுறவுத்துறை, தொழில் வணிகத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10,722 பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.