Published : 09 Apr 2016 09:32 AM
Last Updated : 09 Apr 2016 09:32 AM

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பங்கீடு தீவிரம்: வாரிசுகளுக்கு 25 சதவீத தொகுதிகள்?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டி யிடும் 41 தொகுதிகளின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் கட்சியில் வேட்பாளர் தேர்வு செய்யும் பணி மும்முரமாக தொடங்கியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்கள் அவரவர் ஆதரவாளர் களுக்கு தொகுதியை கேட்டுப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போதைய தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர் களுக்கு இந்தமுறை கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட இருப்பதாகவும், மற்ற மூத்த தலைவர்களின் ஆதரவாளர்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் சூழல் நிலவுவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியது:

காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் தங்கபாலு ஆதரவாளர்களுக்காக ஓசூர், ஆத்தூர் தொகுதிகள் ஒதுக்கப்படலாம். ப.சிதம்பரம் ஆதரவாளர்களுக்காக முசிறி, காட்டுமன்னார்கோவில், ஆற்காடு, காரைக்குடி தொகுதிகள் வழங்கப்படும் என தெரிகிறது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத்துக்காக செய்யாறு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

முன்னாள் அமைச்சர் பிரபு ஆதரவாளர்களுக்காக சூலூர், உதகமண்டலம் தொகுதிகள் பரீசீலனையில் உள்ளன. முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் மகனுக்காக அறந்தாங்கி தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. வசந்தகுமார், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகிய 2 பேரும் நாங்குநேரி தொகுதிக்காக மல்லுக்கட்டுகிறார்கள்.

மாணிக் தாகூர் ஆதரவாளர்களுக் காக சிவகாசி, பட்டுக்கோட்டை தொகுதிகள் பரிசீலனையில் உள்ளன. ராகுல் பரிந்துரைக்கும் வேட்பாளர்கள் கரூர், தாராபுரம் தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. தற்போதைய எம்எல்ஏக்கள் விஜய தாரணிக்கு விளவங்கோடு தொகுதியும், பிரின்ஸுக்கு குளச்சல் தொகுதியும் மீண்டும் ஒதுக்கப்படும் என சொல்கிறார்கள்.

மீதியுள்ள தொகுதிகளில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் பிற அணி நிர்வாகிகள் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

களமிறங்கும் வாரிசுகள்

காங்கிரஸ் கட்சியிலும் வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. இந்த தேர்தலில் மிக அதிக எண்ணிக்கையில் கட்சியின் இப்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகளின் வாரிசுகள் களமிறங்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருத்தணி தொகுதியில் கட்சியின் மாநில பொருளாளர் நாசே.ராமச்சந் திரன் மகன் ராஜேஷ், அம்பத்தூர் தொகுதியில் முன்னாள் எம்.பி.ஹாரூன் மகன் அசேன், செய்யாறு தொகுதியில் முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி மகன் விஷ்ணு பிரசாத், கோபிச்செட்டிபாளையத்தில் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா, அறந்தாங்கியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் மகன் அன்பரசன், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் எதிர்பார்த்த காரைக்குடி தொகுதியிலும் ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர். இவர்களுக்கு விரும்பும் தொகுதிகளில் சீட் நிச்சயம் என கூறப்படுகிறது.

சுதர்சன நாச்சியப்பன் மகன் ஜெயசிம்மா எதிர்பார்த்த சிவகங்கை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட வில்லை. இதனால் அவர் தனக்கு சாதகமான வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கின்றார்.

ஆற்காடு தொகுதியில் முன்னாள் எம்பி அன்பரசு மகன் அருள் அன்பரசு களமிறங்க தீவிரம் காட்டி வருகிறார். தாராபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்மாள் பேத்தி ஜான்சிராணி, முதுகுளத்தூரில் கட்சியின் முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் மகன் ரவி, சங்ககிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங் கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் நிறுத்தப்படுவார்கள் என தெரிகிறது. மறைந்த இந்த தலைவர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் சீட் வழங்கப்படும் என பேச்சு உள்ளது.

இதன்படி கட்சியில் சுமார் 25 சதவீதம் அளவுக்கு தொகுதிகளை வாரிசுகள் கவர்ந்துச் சென்றுவிடுவார்கள் என தெரிகிறது. மீதியுள்ள இடத்தை மற்றவர்கள் பகிர்ந்துக் கொள்ளும் நிலை உள்ளது.

தேர்தல் குழு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் 27 பேர் கொண்ட தேர்தல் குழுவை அகில இந்திய தலைவர் சோனியா அறிவித்துள்ளார்.

இக்குழுவில் ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு, குமரி அனந்தன், எம்.கிருஷ்ணசாமி, மணிசங்கர் அய்யர், பிரபு, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜே.எம்.ஹாரூன், டி.யசோதா, நாசே.ராமச்சந்திரன், சி.ஆர்.கேசவன், குஷ்பு, வசந்த குமார், செல்வப் பெருந்தகை, அஸ்லம்பாஷா உள்ளிட்ட 27 பேர் கொண்ட தேர்தல் குழுவை அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x