Published : 05 Apr 2022 07:14 AM
Last Updated : 05 Apr 2022 07:14 AM
சென்னை: பணி நீட்டிப்பு கோரி சென்னை டிஎம்எஸ் வளாகத்திலும், மெரினாவில் அண்ணா, கருணாநிதி நினைவிடம் முன்பும் 800 ஒப்பந்த செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ தேர்வாணையம் (எம்ஆர்பி) மூலம் கடந்த 2020-ல் ஒப்பந்த அடிப்படையில் 3,200 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.
தற்போது கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், சுமார் 2,400பேருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி 800-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் கூறியும் கலைந்து செல்லாததால், அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்ற போலீஸார் முயன்றனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட செவிலியர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த 600-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உட்பட சுமார் 800 பேர் ஒன்றாக இணைந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா - கருணாநிதி நினைவிட நுழைவுவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் பெண் போலீஸார் ஈடுபட்டனர். அப்போதும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். வாகனங்களில் ஏற்றி தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணியில் உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதுபற்றி செவிலியர்களிடம் கேட்டபோது, “800-க்கும் மேற்பட்ட செவிலியர்களை பணியில் இருந்துநீக்கியதில் உள்நோக்கம் இருக்கிறது. செவிலியர்கள் என்றும் பாராமல் சாலையில் இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்துள்ளனர். இதில் சிலர் காயமடைந்துள்ளனர்” என்றனர்.
அமைச்சர் உறுதி
செய்தியாளர்களிடம் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘800 செவிலியர்களுக்கும் கண்டிப்பாக மாற்றுப் பணி வழங்கப்படும். அரசு பணியிலும் முன்னுரிமை வழங்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT