Published : 05 Apr 2022 07:20 AM
Last Updated : 05 Apr 2022 07:20 AM

எந்தக் காவடியை தூக்கிக் கொண்டு முதல்வர் டெல்லி சென்றார்: பழனிசாமி விமர்சனம்

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி திறந்து வைத்தார். அருகில் முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்எல்ஏ பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர்.

சேலம்/தேனி: முதல்வர் ஸ்டாலினும், அவரது அமைச்சர்களும் எந்தக் காவடியை தூக்கிக் கொண்டு டெல்லி சென்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.

சேலம் மாவட்டத்தில் சேலம், கொங்கணாபுரம், எடப்பாடி, ஓமலூரில் அதிமுக சார்பில் நீர்மோர்பந்தலை அவர் திறந்து வைத்தார். அப்போது, ஓமலூரில் அவர் பேசியதாவது: நான் முதல்வராக இருந்தபோது டெல்லி சென்று தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களையும், வரவேண்டிய நிதி குறித்து பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசி பெற்று வந்தேன்.

அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், “அதிமுக டெல்லிக்கு காவடி தூக்குகிறது. பாஜகவுக்கு அடிமையாக உள்ளது” என்றெல்லாம் கடுமையாக விமர்ச்சித்தார். இப்போது முதல்வர் ஸ்டாலினும், அவரது அமைச்சர்களும் எந்தக் காவடியைத் தூக்கிச் சென்று பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்தனர். யாருக்கு யார் அடிமை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசிடம் இருந்துஏராளமான திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி மக்களுக்கு பல நன்மைகளை வழங்கியது. அண்மையில் முதல்வர் ஸ்டாலினும், அவரது அமைச்சர்களும் ஏதோ ஒரு சாக்கு வைத்து துபாய் சென்றனர். இதை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து ஏதாவது நடவடிக்கை எடுத்துவிடுமோ என்று அஞ்சி ஓடோடிச் சென்று பிரதமரை பார்த்துள்ளனர்.

டெல்லியில் ‘முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர் ராஜ்நாத் சிங், மிகுந்த அன்போடு வரவேற்று கவுரவித்தார் என்றும், அங்கிருந்து புறப்பட்டபோது கார் வரை வந்து வழியனுப்பி வைத்தார். பிரதமரும் மகிழ்ச்சியோடு வரவேற்றார்’ என திமுக கூறுகிறது. அவர்கள் அரசியல் நாகரிகம் தெரிந்தவர்கள். அவர்களுக்கு பெருந்தன்மை இருக்கிறது, ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.

பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அவரை, ‘கோ பேக் மோடி’ என ஸ்டாலினும், திமுகவினரும் கருப்புப் பலூன்களை பறக்கவிட்டனர். அரசியல் நாகரிகம் தெரியாத கட்சி திமுக என்றார்.

பிரிந்ததால் தோல்வி: ஓபிஎஸ்

இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாவது:

நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் தோல்வியை தவிர்த்திருக்கலாம். ஒற்றுமை இல்லாததால்தான் தொடந்து நமக்கு தோல்வி ஏற்பட்டு வருகிறது. சையதுகான் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார். அவர் கூறியதுபோல சில பிரச்சினைகள் நமது தோல்விக்குக் காரணமாக இருக்கலாம். நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை என்றார்.

கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் அதிமுக, அமமுக கட்சிகள் இணைய வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x