Published : 14 Apr 2016 04:55 PM
Last Updated : 14 Apr 2016 04:55 PM

சீட் கிடைக்காத மாவட்ட செயலாளர்: உசிலம்பட்டியில் நடந்த திடீர் மாற்றம்-திமுக பட்டியல் ஏற்படுத்திய பரபரப்பு

மதுரை நகர் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் வி.வேலுச்சாமிக்கு சீட் கிடைக்கவில்லை. உசிலம்பட்டி உள்ளிட்ட சில தொகுதிகளின் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகர், புறநகர் திமுகவில் 4 செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் பி.மூர்த்தி, கோ.தளபதி, எம்.மணிமாறன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்தமுறை திருமங்கலத்தில் போட்டியிட்ட மணிமாறன், தற்போது இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், திருப்பரங்குன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். மதுரை நகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.வேலுச்சாமிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவரது கட்டுப் பாட்டில் இருந்த மதுரை வடக்குத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. மதுரை தெற்கு தொகுதியில் அதிமுக, பாஜக கட்சிகள் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. இதனால் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த வேலுச்சாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு பதிலாக சவுராஷ்டிர சமூகத்தை சேர்ந்த பாலச்சந்திரனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது

உசிலம்பட்டி தொகுதியில் 2011 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஓ.ராமசாமியின் மகன் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன் அல்லது உக்கிரபாண்டியன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், இளமகிழன் சீட் பெற்றார். இவர் திமுக எம்.பி. கனிமொழி சிபாரிசில் வாய்ப்பு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் செவனம்மாள், எஸ்.ஆர்.கோபி ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மணிமாறனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தொகுதி மாறி நிறுத்தப்பட்டுள்ளார். சோழவந்தானில் பெண் மருத்துவருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் புதியவரான ஸ்ரீபிரியா தேன்மொழி நிறுத்தப்பட்டார். மேலூரில் அதிமுக வேட்பாளர் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், தொகுதியில் செல்வாக்கு பெற்ற கள்ளர் சமுதாயத்தை சேர்ந்த அ.பா.ரகுபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

பா.பிளாக் தலைவர் அய்யணன் அம்பலத்தின் சகோதரர் மகன். இவரது உறவினர்கள் தொகுதிக்குள் பரவலாக உள்ளனர்.

நத்தத்தில் அதிக உறவினர்களைக் கொண்ட ஆண்டி அம்பலத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ராமநாபுரத்தில் சுப.தங்கவேலனுக்கு பதிலாக அவரது மகன் திவாகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 2011 தேர்தலில் போட்டியிட்ட 4 பேரும் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சாத்தூரில் சீட் கேட்டு பெரிய அளவில் யாரும் முயற்சி மேற்கொள்ளாததால் உறுப்பினராக உள்ள புதியவர் சீனி வாசனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x