வணிகவரிக்கு ரூ.1.04 லட்சம் கோடி; பதிவுத் துறைக்கு ரூ.13,913 கோடி: அதிக வருவாய் ஈட்டியதால் அமைச்சர் மூர்த்திக்கு முதல்வர் வாழ்த்து

வணிகவரிக்கு ரூ.1.04 லட்சம் கோடி; பதிவுத் துறைக்கு ரூ.13,913 கோடி: அதிக வருவாய் ஈட்டியதால் அமைச்சர் மூர்த்திக்கு முதல்வர் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு ரூ.1.04 லட்சம் கோடி மற்றும் ரூ.13,913 கோடி வருவாய் எய்தப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து வணிகவரி, பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-22ம் நிதியாண்டில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை காணாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வணிகவரித் துறையில் மொத்த வருவாய் ரூ.1,04,970 கோடியில், ஜிஎஸ்டி வரி இழப்பீடு நீங்கலாக ரூ.97,734 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2019-20 மற்றும் 2020-21 ஆகிய நிதியாண்டுகளில் ஈட்டப்பட்ட வருவாயை ஒப்பிடும்போது 13.34 மற்றும் 13.82 சதவீதம் கூடுதல் வசதியாகும்.

அதேபோல், பதிவுத் துறையில் ரூ.13,913.65 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது பதிவுத்துறைக்கு 2021-22ம் நிதி ஆண்டுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.13,252.56 கோடியை விட ரூ.661.09 கோடி அதாவது 4.99 சதவீதம் அதிகமாகும். கடந்த 2019-20 மற்றும் 2020-21 ஆகிய நிதியாண்டுகளில் ஈட்டப்பட்ட வருவாயை ஒப்பிடும்போது, 26.16 மற்றும் 30.73 சதவீதம் வளர்ச்சியாகும்.

மேலும், கடந்த 2020-21ம் நிதிஆண்டில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ.10,643.08 கோடியுடன் ஒப்பிடும் போது, 2021-22ம் நிதியாண்டில் ரூ.3,270.57 கோடி கூடுதலாக ஈட்டப்பட்டு மொத்தம் ரூ.13,913.65 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, வணிகவரி, பதிவுத் துறையில் எய்தப்பட்டுள்ள சாதனைகள் தொடர்பாக அமைச்சர் பி.மூர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நிகழ்ச்சியில், துறையின் செயலர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி ஆணையர் க.பணீந்திரரெட்டி, பதிவுத் துறை தலைவர் ம.ப.சிவனருள் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in