Published : 23 Apr 2016 02:44 PM
Last Updated : 23 Apr 2016 02:44 PM

கொடுவாய் சிவன் கோயிலில் பழமை வாய்ந்த ‘மூத்த தேவி’ சிற்பங்கள்

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சிவன் கோயிலில் ‘மூத்த தேவி’ சிற்பங்கள் உள்ளன. 75 செ.மீ. உயரமும், 105 செ.மீ. அகலும் கொண்ட இந்தச் சிலைகள், நூற்றாண்டு பழமை வாய்ந்தவையாகக் கருதப்படு கின்றன. மூத்தேவி என்பது தான், வழக்கத்தில் ‘மூதேவி’ என்று மருவியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சிற்பத்தில் மூத்த தேவியின் மகன் மாந்தன், மகள் மாந்தியுடன் கற்சிலை காணப்படுகிறது. இதேபோன்ற சிலை பெருந்தொழுவு கிராமத்திலும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் மு.ரமேஷ்குமார், க.பொன்னுசாமி, ரஞ்சிதா ஆகியோர் மேற்படி கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து சு.ரவிக்குமார் கூறும்போது, “கொங்கு மண்டலத்தில் ‘தொழுவு’ என்று முடியும் ஊர்கள் மிகவும் தொன்மை வாய்ந்தது. இதற்கு சான்றாக, பெருங்கற்படை காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் உள்ளன.கால்நடைகளை பெரும் செல்வமாக கருதி அவற்றுக்கு ‘தொழுவம்’ அமைத்து காத்தனர். அந்த வகையில், கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்பட்ட ஓர் ஊர் ‘பெருந்தொழுவு” என்றழைக்கப் படுகிறது. இங்கும், கொடுவாய் பகுதியிலும் பழமைவாய்ந்த ‘மூதேவி’ என்றழைக்கப்படும் ‘மூத்த தேவி’ சிற்பங்கள் காணப்படுகின்றன. இதனை ‘மூதேவி’, ‘மூத்த தேவி’, ‘ஜேஸ்டா தேவி’ என்றும் மக்கள் அழைக்கின்றனர். சமஸ்கிருத மொழியில், ‘ஜேஸ்டா தேவி’ என்பதற்கு ‘மூத்த தேவி’ என்று பொருள். வளமையும், நல்லதையும் செய்கின்ற முதன்மையான தெய்வமாகிய மூத்தவள் என்பது இதன் அர்த்தம். பல்லவர் காலத்துக்கு முன்பாகவே தமிழர்களின் ‘தாய் தெய்வ’ வழிபாட்டுக் கடவுளாக இருந்திருக்கலாம்.

அதிகம் தூங்குபவரையும், நற்பண்புகள் இல்லாதவரையும் ‘மூதேவி’ என்றழைக்கப்படும் ஓர் இழி பொருள் தரும் சொல்லாக மாறியுள்ளது. ஒருபுறம் காக்கை, மறுபுறம் துடைப்பம், காளை உருவம், தாமரை, தலையில் கிரீடம், காதில் தாடங்கம், கழுத்து, கைகளில் அணிகலன்கள் அணிந்த நிலையில் சிற்பங்கள் காணப்படுகின்றன. பண்டைய தமிழர்கள் போர் வெற்றிக்காக கொற்றவையையும், வணிக வளமைக்காக அய்யனா ரையும் வழிபட்டதுபோல், வேளாண்மை செழிப்புக்காக ‘மூத்த தேவி’யை வழிபட்டிருக்கலாம் என ஆய்வு மூலமாக தெரிய வருகிறது” என்றார்.

தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் ரா.பூங்குன்றன் கூறும்போது, ‘கொங்கு மண்டலத் தில் இதுபோன்ற சிற்பங்கள் காண்பது மிகவும் அரிது. கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x