Published : 05 Apr 2022 07:06 AM
Last Updated : 05 Apr 2022 07:06 AM

கிண்டி அரசு கரோனா மருத்துவமனை படிப்படியாக தேசிய முதியோர் நல மருத்துவமனை ஆகிறது: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

கிண்டி அரசு கரோனா மருத்துவமனை படிப்படியாக தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, கிண்டி கிங்ஸ் ஆய்வக வளாகத்தில், ரூ.127 கோடி மத்திய அரசு நிதியின் கீழ் தேசிய முதியோர் நலமருத்துவமனைக்கான கட்டிடம்கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதற்குள், 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் தொடங்கியது. இதையடுத்து, தேசிய முதியோர் நல மருத்துவமனை, அரசு கரோனா சிறப்புமருத்துவமனையாக மாற்றப்பட்டது.

அங்கு, ஆக்சிஜன் வசதியுடன் 750 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில்சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில் அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்துாரார் உள்ளிட்ட அரசு மருத்துமவனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டாலும், ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்பொதுமக்கள் வரை கிண்டிஅரசு கரோனா மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற விரும்பினர். இதனால், மற்ற மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருந்தாலும், இங்கு மட்டும் எப்போதும் படுக்கைகள் நிரம்பிய நிலையில் இருந்தது. கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மையமும் இங்கு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது, கரோனா மூன்றாம் அலைக்கு பின், தமிழகத்தில் கரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் வந்துவிட்டது.

கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் நோயாளிகள் யாரும்வருவதில்லை. அங்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் வழக்கம்போல், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர். தற்போது, இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மட்டுமே, எப்போதாவது வரும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க காத்திருக்கின்றனர். கரோனா தொற்று குறைந்துவிட்டதால், இந்த மருத்துவமனையை தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ளது. தொற்றின் 4-வது அலை வருமா, வராதா என்பதை உறுதியாக தெரியவில்லை. அதனால், கிண்டி அரசு கரோனா மருத்துவமனை, தேசிய முதியோர் நல மருத்துவமனையாக படிப்படியாக மாற்றப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x