Published : 05 Apr 2022 07:16 AM
Last Updated : 05 Apr 2022 07:16 AM

கல் அரவை ஆலையை தடுத்து நிறுத்த வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியரிடம் நடிகர் மன்சூர் அலிகான் புகார்

கல்குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலையால் தன் நிலம் பாழாவதாகக் கூறி காஞ்சி மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியிடம் மனு அளித்த திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தன் நிலத்தின் அருகே உள்ள கல் அரவை தொழிற்சாலையைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை இல்லையென்றால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்துக்கு வந்த திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் காஞ்சிபுரம் மாவட்டம் வடமங்கலம் பகுதியில் தனக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அந்த நிலத்தை ஒட்டி கல்குவாரி மற்றும் கல் அரவை தொழிற் சாலை நடத்துபவர்கள் கழிவுகளை நிலத்தில் பாய்ச்சி நாசம் செய்துவிட்டதாகவும் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் 800-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நாசமடைந்திருப்பதாகவும், இதற்கு இழப்பீடாக ரூ.5 கோடி பெற்றுத் தர வேண்டும் என்றும் அந்தப் பகுதியில் உள்ள ஏரியை அவர்கள் நாசம் செய்வதால் அந்த கல் அரவை தொழிற்சாலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

இதுபோல் இந்தக் கூட்டத்தில் 322 பேர் மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அந்த மனுக்களை அனுப்பி வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 நபர்களுக்கும், உத்திரமேரூர் வட்டத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கும், வாலாஜாபாத் வட்டத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கும், பெரும்புதூர் வட்டம், செல்வபெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்த 26 இருளர் இன மக்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் 7 பழங்குடியினருக்கு பழங்குடியினர் நல வாரிய அட்டை ஆகியவற்றை ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் குமார் உட்பட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x