

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியின் மனைவி கமலா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அத்வானிக்கு நேற்று அனுப்பிய செய்தியில், ‘‘மனைவியை இழந்துவாடும் தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.
வைகோ இரங்கல் :
பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனைவி கமலா மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அத்வானிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று அனுப்பிய இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
தங்களது அன்பு மனைவி கமலா அம்மையார் மறைவு செய்தி யறிந்து வேதனை அடைந்தேன். மனிதநேயமும், விருந்தோம்பல் பண்பும் மிக்கவர் அவர். நீங்கள் இருவரும் மனமொத்த தம்பதியராக ஒருவருக்கொருவர் அன்புபாராட்டி இல்லற வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தீர்கள்.
நான் தங்கள் இல்லத்துக்கு வந்த போதெல்லாம் அம்மையார் காட்டிய பரிவும், பாசமும் மறக்க முடியாதது. தங்களுக்கு நேர்ந்துள்ள பேரிழப்பு ஈடு செய்ய முடியாதது. எனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
பாஜக வின் முதுபெரும் தலைவர் அத்வானியின் பொதுவாழ்வில் எப்போதும் துணை நின்ற மனைவி கமலாவின் மறைவுச் செய்தி கேட்டு பெரும் துயரம் அடைந் தேன். அவரது மறைவுக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள் கிறேன்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
பாஜக வின் பிதாமகர் அத்வானியின் மனைவி கமலாவின் மறைவு செய்தியறிந்து தாங்க முடியாத துயரம் அடைந்தேன். அத்வானி யின் நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர். கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கு தாயாக விளங்கியவர். அவரது மறைவு அத்வானிக்கு மட்டுமல்ல, பாஜக வுக்கும் பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.