Published : 05 Apr 2022 06:18 AM
Last Updated : 05 Apr 2022 06:18 AM

கள்ளக்குறிச்சி | நகைக்கடன் தள்ளுபடி செய்ய செயலர் மறுப்பு - ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மனு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் எலவடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில், கடன் தள்ளுபடி செய்ய செயலர் மறுத்ததால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரை நகை கடன் பெற்ற பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பல்வேறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில், 40 கிராம் வரை நகைக்கடன் பெற்ற பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகையும்,ரசீதும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி சின்னசேலம் எலவடிதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 177 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 15-க்கும் மேற்பட்ட பயனாளிகளின் பெயர்கள் நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் இடம் பெற்றிருந்தும், கடன் தள்ளுபடி செய்ய செயலர்மறுப்பு மறுப்பதாக கூறி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் பயனாளிகள் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களிடம் மனு விவரம் குறித்துக் கேட்டபோது, " 40 கிராம் நகைக்கடன் வைத்திருந்த எங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. தற்போது பெயர் இல்லை எனக் கூறி, எங்களை அலைக்கழிக்கிறார். மேலும் கூடுதல் தொகைக் கொடுத்தால் தள்ளுபடி செய்வதாகக் கூறுகிறார் என்றனர்.

இதையடுத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க செயலர் சோலைமுத்துவிடம் கேட்டபோது, "அவர்களது நகை மதிப்பீட்டில் 150 மில்லி கூடுதலாக உள்ளதால், அவர்களுக்கு வழங்க இயலாது" என்றார். ஆனால் நகைக்கடன் ரசீதில் 40 கிராம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே என்றபோது, மதிப்பீட்டாளர் குறைத்து மதிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x