Published : 05 Apr 2022 06:26 AM
Last Updated : 05 Apr 2022 06:26 AM

கடமைகளில் இருந்து தவறியதால் சாத்தூர் அருகே ஊராட்சி தலைவரின் அதிகாரம் பறிப்பு

விருதுநகர்: அடிப்படை கடமைகளில் இருந்து தவறியதாக ஊராட்சித் தலைவர் ஒருவரது அதிகாரத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பறித்துள்ளார்.

சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராம ஊராட்சி செயலர் கதிரேசன். இவர், அப்பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவர் கட்டிடம் கட்ட வரைபட அனுமதி கோரிய விண்ணப்பத்துக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பிப்ரவரி 8-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வில்லிபுத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு விசாரணைக்குரிய ஆவணங்களை ஊராட்சித்தலைவர் பார்த்தசாரதி வழங்க மறுத்துள்ளார்.

அதனால், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), சாத்தூர் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), சாத்தூர் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் ஆகிய 5 பேர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர், விசாரணை தொடர்பாக மேட்டமலை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது விசாரணையை தடுக்கும் நோக்கத்தில் ஊராட்சித் தலைவர் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் அலுவலகம் திறக்கப்பட்டது. அங்கு ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் ஊராட்சியின் வரவு, செலவுக்கணக்கை ஆய்வு செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

அதையடுத்து ஊராட்சியின் மாதாந்திர வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்யவிடாமல் தடுத்தது, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுத்தது, ஊராட்சித்தலைவர் அடிப்படை கடமை களைச் செய்வதில் இருந்து தவறியது என ஊராட்சித் தலைவர் மீது புகார் எழுந்தது.

அதன்பேரில் ஊராட்சி நிர்வாக நலன் கருதியும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203-ன் கீழ் ஆட்சி யருக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரத்தை பயன்படுத்தி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மேட்டமலை கிராம ஊராட்சியின் காசோலைகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் முதன்மை கையொப்பமிடும் அதிகாரம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-க்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x