Published : 19 Apr 2016 11:03 AM
Last Updated : 19 Apr 2016 11:03 AM

வேட்பாளர் மாற்றம்: உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு எதிராக பாலுவை களமிறக்கியது பாமக

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

நேற்று (திங்கள்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பாமக உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மாற்றம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், "எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக இரா.ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.

இப்போது அவருக்கு பதிலாக பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநிலத் தலைவருமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் க.பாலு உளுந்தூர்பேட்டை தொகுதியின் புதிய வேட்பாளராக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார்.

தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 104 தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் வட மாவட்டங்களில் உள்ளன.

கூடுதல் பலம்..

இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த பாமக வேட்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாஸிடம் வேட்பாளர் மாற்றம் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், “ஏற்கெனவே உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராமமூர்த்தி பலம் பொருந்தியவர்தான். இருப்பினும், கூடுதல் பலத்துக்காக அவருக்கு பதிலாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.பாலு நிறுத்தப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் விஜயகாந்த் டெபாசிட்கூட வாங்கமாட்டார். பாமக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் எல்லா வேட்பாளர்களும் தோற்கடிக்கப்படுவர்’’ என்றார்.

வழக்கறிஞர் கே.பாலு கூறும்போது, ‘‘இத்தொகுதியில் நாங்கள் எளிதாக வெற்றி பெறுவோம். நடிகர் என்ற மாயையை இழந்து விஜயகாந்த் தோல்வியை சந்திப்பார். எதிர்கட்சித் தலைவராக அவர் எந்தப் பணியையும் செய்யவில்லை. மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக கோட்டையில் விஜயகாந்தை தோற்கடிக்க வேண்டும் என்று எங்கள் கட்சியினர் ஏக்கத்துடன் இருந்தனர். அந்த ஏக்கம் இத்தேர்தலில் நிறைவேறப் போகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x