

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முடிவு குறித்து இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என பல நாட்களாக வாசன் கூறிவந்த நிலையில், இன்று ஒருவழியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமாகா கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
கூட்டணி தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் ஆலோசனை நடைபெற இருப்பதாகவும். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் 3 மணியளவில் கூட்டணி குறித்து ஜி.கே.வாசன் அறிவிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஜி.கே.வாசனுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆகியோர் பேசி வருவதாகவும், கூட்டணி முடிவு இன்று வெளியாகும் எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) காலை தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆகியோர் பேசி வருகின்றனர். கூட்டணி முடிவு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும். ஒருவேளை கூட்டணி அமைந்தால் தமாகாவுக்கான தொகுதிகள் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி கட்சிகளால் பகிர்ந்தளிக்கப்படும்" என்றார்.
நாளை முதல் விஜயகாந்த் பிரச்சாரம்:
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூரில் நாளை நடைபெறுகிறது. நாளை முதலே விஜயகாந்த் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார் என திருமாவளாவன் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, "நாளைய மாநாட்டின்போது தேமுதிக அல்லது மக்கள் நலக் கூட்டணி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஆனால், தேர்தல் அறிக்கை நாளை வெளியாக வாய்ப்பில்லை" என்றார்.
சின்னத்தால் சிக்கல்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேரும் முடிவில் ஆரம்பம் முதலே இருந்தது. இந்த சூழலில், ஆரம்பத்தில் தமாகா கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை தர அதிமுக தரப்பு மறுத்தது.
ஒரு கட்டத்தில் தொகுதிகளை குறைத்துக் கொடுத்தாலும் பரவாயில்லை அதிமுகவுடன் இணைவது என்று தமாகா தரப்பு முடிவெடுத்தது.
ஆனால், இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்பேரில், தேமுதிக ம.ந.கூட்டணி அணியில் சேருவதற்கான முடிவில் தமாகா உள்ளதாக தெரிகிறது.
இத்தகைய சூழலிலேயே ஜி.கே.வாசனுடன் விஜயகாந்த், வைகோ பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுள் ஒருவரான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜகவும் பேச்சு:
இது ஒருபுறமிருக்க, "தமாகாவின் 2-ம் கட்ட நிர்வாகிகளுடன் பாஜக பேசி வருகிறது. ஊழலற்ற ஆட்சியை அமைக்க ஜி.கே.வாசன் பாஜக கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறோம். உதிரிகளாக கிடந்தால் சாதிக்க முடியாது" என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறியுள்ளார்.