Published : 05 Apr 2022 06:53 AM
Last Updated : 05 Apr 2022 06:53 AM

நாகை | கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம் - குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை

நாகப்பட்டினம்: நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்த ஒரு மாணவி கல்விக் கட்டணம் கட்டாதது தொடர்பான பிரச்சினையில் மனமுடைந்து மார்ச் 30-ம் தேதி வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கல்லூரி மாணவிகள், மாணவியின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தியதை அடுத்து, கல்லூரி தாளாளர், கல்லூரி முதல்வர், வகுப்பாசிரியர் ஆகிய 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அவர்கள் 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து, அவரது பெற்றோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளான நேற்று நாகை அவுரித்திடலில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டும், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், மாணவி தற்கொலை விவகாரத்தை நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்று, உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 9 பேர் நேற்று ஆஜராகி சாட்சியம் அளிக்க சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சம்மன் அளிக்கப்பட்ட அனைவரும் நேற்று நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி (பொ) சுரேஷ் கார்த்திக் முன்னிலையில் சாட்சியம் அளித்தனர்.

இந்திய வர்த்தக குழுமம் சார்பில் மனு... நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய வர்த்தக குழும தலைவர் சலீம், துணைத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நாகையில் உள்ள அனைத்து சேவை சங்கங்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் தெரிவித்துள்ளது: நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த மாணவி, மார்ச் 30-ம் தேதி நாகூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் உண்மை தன்மை அறிந்து, உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இதை திசை திருப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x