

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் பொன்னாக்குடி சமத்துவபுரத்தில் குடியிருப்போர் கடந்த25 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
அவர்கள் அளித்த மனு:
பொன்னாக்குடி சமத்துவபுரம் குடியிருப்புகளை 1998-ல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி திறந்து வைத்தார்.இங்கு 100-க்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ள நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை. தற்போது வீடுகள் பழுதடைந்துள்ள நிலையில் அதை புதுப்பிக்க இயலாமலும், புதிய வீடுகள் கட்ட முடியாமலும் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே விரைவாக பட்டா கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாவட்ட பொறுப்பாளர் நட்சத்திர வெற்றி உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனு:
பாளையங்கோட்டையில் பேருந்து நிலையம் 1960-ல் கட்டப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
இதுகுறித்த கல்வெட்டு பேருந்து நிலையத்தில் இருந்தது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையத்தை புதுப்பித்து திறந்துள்ள நிலையில் அங்குஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை மீண்டும் வைக்கவில்லை. அந்த கல்வெட்டை மீண்டும் பேருந்து நிலையத்தில் வைக்க வேண்டும் .
நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி தொகுதி செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் அளித்த மனு: மானூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டப்புளி கிராமத்தில் 110 குடும்பஅட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 4 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, இப்பகுதி மக்கள் பயன்பெற அப்பகுதியிலேயே ரேஷன் கடை அமைக்க வேண்டும். மேலும் இப்பகுதி மக்களுக்கு பேருந்து மற்றும் மருத்துவ வசதிகளை செய்துதர வேண்டும்.
சேரன்மகாதேவி அருகே ஓமநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனு: ஓமநல்லூர் பகுதியில் உள்ளகல்குவாரிகளால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த கல்குவாரிகளை மூடவேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஐடியு தொழிற்சங்க திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஆர். மோகன் உள்ளிட்டோர் அளித்தமனு: கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தற்போது 25-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. மேலும்30 நிறுவனங்கள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. இங்குள்ள நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பல தொழிற்சாலைகளில் பேருந்து வசதி செய்யப்படவில்லை என்பதால் பலரும் இருசக்கர வாகனங்களில் வர வேண்டியிருக்கிறது. பலதொழிலாளர்கள் கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையில் பேருந்துகளில் இறங்கி, அங்கிருந்து தொழிற்சாலைகளுக்கு நடந்தோ அல்லது ஆட்டோக்களிலோ வரவேண்டியுள்ளது.
எனவே, தற்போது இயங்கி கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சிப்காட் வளாகத்துக்குள் வந்து செல்லும் வகையில் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மானூர் ஒன்றிய செயலாளர் டி. ஆபிரகாம் அளித்த மனு: மானூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஆனாலும், கடந்த 2 கல்வியாண்டுகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளி மாணவிகள் இடநெருக்கடியில் சிக்கியுள்ளனர். எனவே இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ.2.73 லட்சம் நலத்திட்ட உதவி
மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது வருவாய்த்துறை சார்பில்,மானூர் வட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 46 பேருக்கு ரூ.2.43 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், 5 பேருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவிகள் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.2.73 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.