Published : 05 Apr 2022 06:10 AM
Last Updated : 05 Apr 2022 06:10 AM

ராஜாபுதுக்குடியில் ஒரு குடம் குடிநீர் விலை ரூ.10 - ஆட்சியர் அலுவலக வாயிலில் கிராம மக்கள் தர்ணா

The price of a jug of drinking water is Rs

தூத்துக்குடி: குடிநீர் வழங்கக் கோரி, கயத்தாறு அருகேயுள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்த 100 பேர் ஊராட்சித் தலைவர் ஆறுமுகசாமி தலைமையில், ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்ட எஸ்.பி. எல்.பாலாஜிசரவணன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனு விவரம்:

எங்கள் கிராமத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக குடிநீர் சரியாக வரவில்லை. ஒரு குடம் குடிநீர் ரூ. 10 விலை கொடுத்து வாங்குகிறோம். கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் எங்கள் ஊர் வழியாகவே செல்கின்றன. ஆனால், எங்களுக்கு குடிநீர் இல்லை. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, எங்களுக்கு குடிநீர் கிடைக்கஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கி மோசடி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் செயலாளர் பா.ராஜா தலைமையில், ஏரல் அருகேயுள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த மகளிர் குழு பெண்கள் அளித்த மனு விவரம்: பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் கேட்டு விண்ணப்பித்தும் கடன் வழங்கப்படவில்லை. ஆனால், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெயரில் கடன் வழங்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது. விவசாயக் கடன், நகைக்கடன் போன்றவற்றிலும் மோசடி நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவபாரத இந்து மக்கள் இயக்கமாநில தலைவர் ந.பாலசுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘அனைத்துசுங்கச்சாவடிகளிலும் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், சுங்கச்சாவடிகளில் பயணிகளுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் கிடையாது. சாலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. சுங்கக்கட்டணம் உயர்வை ரத்து செய்யவேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்குளிக்க முயற்சி

ஆலந்தாவைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகேசன், ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீஸார் அவரை தடுத்து அழைத்து சென்றனர். அவர் அளித்த மனுவில், ‘சவலாப்பேரி பேருந்து நிறுத்தத்தில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி பெற்றேன். சிலரது எதிர்ப்பால், கடையை நடத்த முடியாமல் சிரமப்படுகிறேன். ஆவின் பாலகம் அமைக்க உதவ வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x