

முந்தைய காங்கிரஸ், திமுக கூட்டணி அரசின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பாஜகவுடன் கூட்டணி அமைத் துள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
மணல் கொள்ளையை தடுக்கவும், ஆற்றுப்படுகைகளை பாதுகாக்கவும், மணல் எடுப்பதை முறைப்படுத்தவும் மத்திய அரசு புதிய கொள்கையை கொண்டு வந்துள்ளது. செயற்கைக்கோள் மூலம் மணல் கொள்ளையை தடுக்க முடியும். மத்திய அரசின் புதிய கொள்கையை நடைமுறைப்படுத்த ஆய்வு நடைபெறுகின்றன. எங்கு மணல் கொள்ளை நடைபெற்றாலும் மத்திய வனத் துறை அமைச்சகத்துக்கு நேரடியாகப் புகார் தெரிவிக்க இப்புதிய கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்தான் சுங்கக் கட்டணம் நிர்ணயம், குறிப்பிட்ட காலத்துக்குப் பின்பு சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில்தான் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது தெரியாமல் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக அரசு சரியான பாதையில் செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும்.
பாஜகவில் 11 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் 8 லட்சமாக இருந்த பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 55 லட்சமாக உயர்ந்துள்ளது.
தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பேரம் பேசியதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். இதனால் அவரது கேள்விக்கும், வதந்திக்கும் பதில் அளிக்க முடியாது. அதிமுகவை பாஜக திடீரென விமர்சிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்து அதிமுகவின் ஊழலை விமர்சித்து வருகிறோம் என்றார்.