

கரூர்: கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி பரத நாட்டிய ஆசிரியைக்கு, பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் அத்துமீறியதாக எழுந்த புகார் குறித்து, கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியம் மற்றும் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்வானின் பேத்தி அந்த பெண்மணி. பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பரதநாட்டிய ஆசிரியை. இவரது கணவர் அரசு பணியில் உள்ளார். இவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகன் உள்ளார். 23 ஆண்டுகள் பரத நாட்டிய ஆசிரியையாக பணியாற்றி வரும் அந்த பெண்மணி, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு பிப்.28-ம் தேதி காலையில் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் ஆய்வு செய்தவதற்கு வந்துள்ளார். அப்போது அவர் பரதநாட்டிய ஆசிரியையிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த கலை - பண்பாட்டுத் துறை இயக்குநருக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியை, மார்ச் 8-ம் தேதி புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு ஆய்வு செய்ய வந்த ஜாகிர் உசேன், முதலாம் ஆண்டு மாணவிகளை நடனமாட சொல்லி பார்த்தார். அப்போது அனைத்து மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியை, அனைத்து ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் முன்னிலையில், நீங்களே இன்னும் கற்றுக் கொள்ளவேண்டும் என்றார். அதற்கு கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக இணையவழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடி என்னிடம் ”நீங்கள் எல்லாம் வெட்டி சம்பளம் வாங்குகிறீர்கள். எனது யூடியூப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறி எப்படி நடனமாடவேண்டும் என, என் உடல் மேல் கை வைத்து நடன அசைவுகளை சொல்லித் தருவது போல் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
”ஏப்ரல் மாதம் 3 பயிலரங்கம் நடத்த போகின்றேன். அப்போது வாருங்கள் உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்கவேண்டும்” என்றார். அதன்பின் நானாக கதவை திறந்து வெளியே வந்து விட்டேன். அப்போது அனைவரது கவனமும் என் மீதே இருந்தது. இதனால் மனம் வேதனை அடைந்து நாம் உயிர் வாழ வேண்டுமா தற்கொலை செய்துக் கொள்ளலாம் என தோன்றியது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மார்ச் 31-ம் தேதி சென்னையில் உள்ள கலை - பண்பாட்டு துறை இயக்குநரகத்திற்கு நேரில் சென்று புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர், கரூர் மாவட்ட ஆட்சியர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து, தப்பு செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கரூர் மாவட்ட இசைப்பள்ளிக்கு இன்று திங்கள்கிழமை (ஏப். 4) சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.