புதுக்கோட்டை | வீட்டை மசூதியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து எச்.ராஜா தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் அனுமதியின்றி மசூதி கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் அனுமதியின்றி மசூதி கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீடு கட்ட அனுமதி பெற்றுவிட்டு மசூதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் இன்று (ஏப்.4) முற்றுகை முயற்சியில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் எம்.முகமது அலி. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி சம்சுல் பீவி பெயரில் அறக்கட்டளையை தொடங்கியதோடு, விளை நிலத்தில் ஒரு கட்டிடத்தை கட்டினார். அதன்பிறகு, அந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் கோபுரங்களை அமைத்து மசூதிபோன்று மாற்றினார். இவ்வாறு அனுமதியின்றி மசூதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கடந்த ஆண்டு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டிசம்பர் 2021-க்குள் மசூதிபோன்ற அமைப்பு அகற்றப்படும் என அலுவலர்களால் உறுதி அளிக்கப்பட்டது. எனினும், இதுவரை அகற்றப்படவில்லை. இதைக் கண்டித்தும், இடித்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயிலில் இருந்து சம்பந்தப்பட்ட கட்டிடத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்றுகொண்டிருந்தனர்.

மேற்பனைக்காட்டில் முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்ற எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர்.
மேற்பனைக்காட்டில் முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்ற எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர்.

ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வடிவேல் தலைமையிலான போலீஸார், ஊர்வலமாக சென்றோரை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஏப்.12-ம் தேதிக்குள் மசூதி போன்ற அமைப்பை, சம்பந்தப்பட்டோரே இடித்துக்கொள்வது. இல்லையேல், அதன்பிறகு இடித்து அகற்றப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், கீரமங்கலம்-மேற்பனைக்காடு இடையே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in