

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவை சமாளிக்க அவரது சித்தப்பா ஷிவ்பாலுக்கு குறி வைக்கிறது பாஜக. சமாஜ்வாதியில் போட்டியிட முடியாத மகன் ஷிவ்பாலின் மகன் ஆதித்யாசிங் யாதவிற்கும் இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து கூற அவரது வீட்டிற்கு சென்றார் ஷிவ்பால்சிங் யாதவ். இந்த சந்திப்பின் போது உத்தரப் பிரதேச பாஜகவின் தலைவரும் கேபினேட் அமைச்சருமான ஸ்வந்திரதேவ்சிங்கும் உடன் இருந்தார். அப்போது, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷால், உ.பி. தேர்தலில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஷிவ்பால் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது. இதில் தன் கட்சியான பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி-லோகியாவிற்கு(பிஎஸ்பிஎல்) கேட்ட 100 தொகுதிகளில் ஒன்றில் பெற்ற வாய்ப்பு, மகன் ஆதித்யாசிங் யாதவிற்கு தேர்தல் போட்டியில் மறுப்பு உள்ளிட்டவற்றை ஷிவ்பால் விளக்கியுள்ளார். இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் யாதவ் வாக்குகளை பிரிக்க பல்வேறு வியூகங்கள் அமைக்கிறது பாஜக. இக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் அகிலேஷின் சித்தப்பாவுமான ஷிவ்பாலை தன்பக்கம் இழுக்கவும் திட்டமிடுகிறது. இதற்காக, ஷிவ்பாலுக்கு உ.பி. சபாநாயகர், மாநிலங்களவை எம்பியுடன் மத்திய அமைச்சர், ஆஸம்கர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர், மகன் ஆதித்யாவை உ.பி எம்எல்ஏவாக்கும் வாய்ப்பு என பெரும் பட்டியல் தயாராகி உள்ளது. இதை ஏற்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகியின் ட்விட்டர் கணக்குகளை பின்தொடரத் தொடங்கி விட்ட்டார் ஷிவ்பால்.
இதில், முதல் வாய்ப்பாக உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் சபாநாயகராக ஷிவ்பாலை ஆக்குவது இடம் பெற்றுள்ளது. ஏனெனில், இந்தமுறை கூடுதலாக 111 எம்எல்ஏக்களை பெற்ற அகிலேஷ், தனது ஆஸம்கர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து கர்ஹாலின் எம்எல்ஏவாகத் தொடர்கிறார். இதன்மூலம், தீவிர எதிர்கட்சியாக உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் அகிலேஷ் இருப்பார். எதிர்கட்சிகள் வகிக்கும் துணை சபாநாயகர் பதவியை ஷிவ்பாலுக்கு அளித்து பாஜக, அகிலேஷை சமாளித்து விடும்.
துணை சபாநாயகராகும் ஷிவ்பால், எதிர்கட்சி வரிசையில் அகிலேஷின் அருகிலேயே அமர முடியும். ஏற்கனவே தனக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காமையால் அதிருப்தியாகி உள்ளார் ஷிவ்பால். துணைசபாநாயகரில், ஷிவ்பாலுக்கு ஏற்பில்லை எனில், மேலும் பல வாய்ப்புகளை அவருக்கு அளிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதில், அவரது மகன் ஆதித்யாசிங் யாதவை உத்தரப் பிரதேசத்தில் காலியாகும் ஏதாவது ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் அல்லது மேல்சபை மூலமாக அமைச்சர் பதவியும் அளிக்கத் தயாராவதாகத் தெரிகிறது.
ஒருவேளை ஷிவ்பால், மாநிலங்களவ எம்.பி.,யாகி விட்டால் அவர் ஆறாவது முறை எம்எல்ஏவாக இருக்கும் ஜஸ்வந்த்நகர் காலியாகும். இதற்கான இடத்தேர்தலில் அவரது மகன் ஆதித்யா போட்டியிடலாம். ஷிவ்பாலிடம் அவரது கட்சியை பாஜகவில் இணைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஒரு தகவல் கசிகிறது. இது நடந்தால், அகிலேஷால் காலியான ஆஸம்கர் மக்களவை இடைத்தேர்தலில் ஆதித்யா அல்லது ஷிவ்பால் பாஜக சார்பில் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளன.
ஆதித்யாவிற்கு உத்தரப் பிரதேச தேர்தலில் சமாஜ்வாதியில் வாய்ப்பளிக்க தலைவர் அகிலேஷ் மறுத்திருந்தார். இந்த புதிய அரசியல் மாற்றங்களால், சமாஜ்வாதியின் முக்கிய வாக்குவங்கியாக அதிக எண்ணிக்கையில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தின் யாதவர்களை பாஜக பிரிக்கும். 2017 சட்டசபை, 2019 மக்களவை தேர்தல்களில் ஷிவ்பாலின் பிஎஸ்பிஎல் தனித்து போட்டியால் அகிலேஷுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. உத்தரப் பிரதேச தேர்தலின் போது அகிலேஷின் சகோதரர் மனைவியான அபர்னா யாதவ், பாஜகவில் ஐக்கியமானது நினைவுகூரத்தக்கது.