Published : 04 Apr 2022 09:31 AM
Last Updated : 04 Apr 2022 09:31 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும் திமுக சார்பில் தமிழகத்தில் வரும் 9, 10-ம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இது தொடர்பாக திமுக கொள்கை பரப்புச் செயலர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த மார்ச் 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் , அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர், மகளிர், உழவர், தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது நலன் காக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றின் சிறப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் வரும் 9, 10-ம் தேதிகளில் 77 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்தக் கூட்டங்கள் அந்தந்த மாவட்டச் செயலர்கள் தலைமையிலும், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெறும். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் இவற்றில் பங்கேற்று, சிறப்பாக நடத்த வேண்டும்.
சொற்பொழிவாளர் பட்டியல்
ஒவ்வொரு கூட்டத்திலும் உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 9-ம் தேதி கிருஷ்ணகிரி பொதுக் கூட்டத்தில் கட்சிப்பொதுச் செயலர் துரைமுருகன், கும்பகோணத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி திருவரங்கத்தில் முதன்மைச் செயலர்கே.என்.நேரு, போடிநாயக்கனூரில் துணைப் பொதுச் செயலர் இ.பெரியசாமி, சென்னை மாதவரத்தில் துணைப் பொதுச்செயலர் க.பொன்முடி, மயிலாப்பூரில் உதயநிதி ஸ்டாலின், சோழிங்கநல்லூரில் தயாநிதிமாறன், திருப்பூர் அவிநாசியில் துணைப் பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மதுரை கிழக்கில் துணைப் பொதுச் செயலர் ஆ.ராசா,நாமக்கல்லில் திருச்சி சிவா உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
வரும் 10-ம் தேதி செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT