Published : 04 Apr 2022 10:03 AM
Last Updated : 04 Apr 2022 10:03 AM

2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை சித்திரை திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (கோப்பு படம்)

மதுரை: கரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாகப் பக்தர்கள் பங்கேற்பின்றி உள் திருவிழாவாக நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நாளை (ஏப்.5) பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வது வழக்கம்.

இத்திருவிழா கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி ஆகம விதிப்படி கோயிலுக்குள் நடந்தது. தற்போது கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் பங்கேற்புடன் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது.

இதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நாளை (ஏப்.5) காலை 10.30 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஏப்.12-ம் தேதி இரவு 8.20 மணிக்குமேல் 8.44 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், ஏப்.13-ம் தேதி மீனாட்சி அம்மன் திக்கு விஜயமும் நடைபெறும்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்.14-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.35 மணிக்குமேல் 10.59 மணிக்குள் நடைபெறும். ஏப்.15-ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

ஏப்.16-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x