Published : 04 Apr 2022 10:15 AM
Last Updated : 04 Apr 2022 10:15 AM
கோவை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்,சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து யுபிஎஸ்சி,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப் பிறந்தோம்’ என்ற வழிகாட்டு நிகழ்ச்சியை கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று நடத்தியது.
நிகழ்ச்சியில் கோவை மாவட்டஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது: போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு அந்த சிந்தனை மட்டுமே மனதில் இருக்க வேண்டும். கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது.யுபிஎஸ்சி தேர்வுக்கு எத்தனை பேர் விண்ணப்பிக்கிறார்களோ அத்தனை பேருடன் நாம் உண்மையில் போட்டி போடுவது இல்லை. அதன் முதல்நிலை தேர்வை கடந்து வரும்10 ஆயிரம் பேருடன்தான் நமக்கு தொடக்க முதலே போட்டி இருக்கும்.அவர்கள் நம்மைவிடவோ அல்லது சரிசமமாகவோ திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். தேர்வில் வெற்றிபெற கடின உழைப்பு, விடாமுயற்சி தேவை.
மேலும், இந்த போட்டிக்கு ஏன் நான்தயாராக வேண்டும் என்ற உணர்வு வேண்டும். இல்லையெனில் வெற்றிபெற இயலாது. உங்களைப்போன்றே தேர்வுக்கு தயாராகும் நண்பர்களோடு கூட்டு சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் உங்களுக்கு பாரம் குறையும். எனவே, அவ்வாறு படிக்க முயற்சியுங்கள். வெற்றி என்பது தனியே வாழ்க்கையில் இல்லை. எல்லாம் தொடர் பயணம்தான். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இதோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணக்கூடாது. ஒவ்வொரு சோதனையையும் வாய்ப்பாக கருத வேண்டும். கஷ்டமான சூழ்நிலையில் இருந்துதான் புதிய விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். ஐஏஎஸ் பணியை பெறுபவர்களுக்கு பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்பும், அனுபவமும் கிடைக்கும் என்பதுதான் இந்த பணியின் தனிச்சிறப்பு. இவ்வாறு அவர் பேசினார்.
மொழி ஒரு தடையல்ல
நிகழ்ச்சியில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் எஸ்.டி.வைஷ்ணவி பேசும்போது, “சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் 200-க்கு 90 முதல்100 மதிப்பெண்கள் பெற்றால் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறலாம். நடப்பு நிகழ்வுகள் குறித்து அறிந்துகொள்ள, ‘தி இந்து’ ஆங்கிலம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்களை படிக்கலாம். முதன்மைத் தேர்வில் ஆங்கில மொழித்தாள் தேர்வைத் தவிர, பிற தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்பதால், மொழியும், எழுதும் திறனும் தேர்ச்சி பெற ஒரு தடை கிடையாது. மூன்றாம் நிலை தேர்வான நேர்முகத் தேர்வில், உங்களின் ஆளுமைத் திறனை அறிந்துகொள்ள சிக்கலான சூழ்நிலையை எவ்வாறு சிறப்பாக கையாள்வது என்பது குறித்த கேள்விகள் அமையும். இதில் தமிழில் பதில் அளிக்கலாம்” என்றார்.
‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவி ஆசிரியர் செல்வ புவியரசன் பேசும்போது, “தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்குதயாராகும் மாணவர்களுக்கு ‘இந்து தமிழ் திசை’ உற்ற தோழமையாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறது. 100-க்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்களுடன் மிகச் சிறப்பான வகையில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ஆண்டு தோறும் ‘இயர் புக்’ வெளியாகி வருகிறது. அதேபோல, செய்திகளிலும், கட்டுரைகளிலும் அரசின் முக்கிய கொள்கை முடிவுகள், திட்டங்கள் அவற்றின் சாதக, பாதக அம்சங்கள், துறைசார்ந்த அறிஞர்களால் விவாதிக்கப்படுகிறது. இத்தகைய கட்டுரைகள் சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது” என்றார்.
தொடர்ந்து, சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த மாணவர்களின் பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் முதன்மை பயிற்றுநர் எஸ்.சந்திரசேகர், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடர்பாக அகாடமியின் கோவை மைய மேலாளர் எஸ்.அருண் ஆகியோர் பதில் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தேர்வுக்கு வழிகாட்டி நூலும் பாடத்திட்ட குறிப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்வில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்விட பார்ட்னராக இந்துஸ்தான் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட்டும், மீடியா பார்ட்னராக கோவை கிங் டெலிவிஷனும் இருந்தன.
நாளிதழ் வாசிப்பு அவசியம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் பேசும்போது, “யுபிஎஸ்சி தேர்வில் மூன்றாவது முறைதான் நான் தேர்ச்சி பெற்றேன். அவ்வாறு தேர்வெழுதும்போது முழுநேரம் பணியாற்றிக்கொண்டேதான் தேர்வெழுதினேன். நீங்கள் உங்கள் மனதில் ஓர் இலக்கை நிர்ணயித்து, அது கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று நினைத்தால், உங்களை சுற்றியுள்ளோர் அது நிறைவேற உதவி செய்வார்கள். எனக்கு அது நடந்தது. இலக்கை அடைவதற்குள் உங்களுக்கு ஏராளமான தடைகள், பிரச்சினைகள் ஏற்படும். நேர்முகத் தேர்வு வரை சென்று ஒருவர் வெற்றிபெற முடியவில்லையென்றாலும், சோர்வடைந்து பின்வாங்கக்கூடாது. 8-ம் வகுப்பு முதல் எனக்கு நாளிதழ் வாசிக்கும் பழக்கம் தொடங்கியது. காலையில் நாளிதழை படித்துவிட்டுதான் மற்ற வேலைகளை தொடங்குவேன். ஆனால், யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்கத் தொடங்கும்வரை எனக்கு நாளிதழ் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாது. தினந்தோறும் நாளிதழ் படிக்க, படிக்க நமக்கு தெரியாமல் தகவல்கள் நமக்குள்ளே சென்றுகொண்டே இருக்கும். தேர்வெழுதும்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று கருதுபவர்கள் கண்டிப்பாக நாளிதழ் வாசிக்க தொடங்க வேண்டும்”என்றார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT