'வாடகை உயர்வு பிரச்சினையால் மக்கள் பாதிப்பர்' - சொத்து வரி உயர்வுக்கு தொழில் அமைப்பினர் எதிர்ப்பு

'வாடகை உயர்வு பிரச்சினையால் மக்கள் பாதிப்பர்' - சொத்து வரி உயர்வுக்கு தொழில் அமைப்பினர் எதிர்ப்பு
Updated on
1 min read

கோவை: தமிழக அரசு சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது. 1200 முதல் 1800 சதுரடி வரை 100 சதவீத வரி உயர்வும், 1801 சதுரடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 50 சதவீத சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறை மிகவும் இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் சொத்து வரி உயர்வானது வாடகை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், தமிழக அரசு சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழில் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

டான்சியா துணை தலைவர் எஸ்.சுருளிவேல்: கரோனா தொற்றுப் பரவல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தொழில் துறையினர் முழுமையாக இன்னும் மீண்டு வரவில்லை. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன.

மூலப்பொருட்களின் விலை உயர்வு ஒட்டுமொத்த உற்பத்தி தொழில் துறையை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு சொத்து வரியை மிகவும் அதிகளவில் உயர்த்தியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

சென்னையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரி உயர்த்தப்பட்டுள்ளது. மிக அதிக வரி உயர்வு தொழில் துறையினருக்கு மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். எனவே, தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

டாக்ட் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ்: தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக தொழில் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர்.

மக்கள் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இந்த நிலையில் சொத்து வரி உயர்வால் நகர பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்புகளுக்கான வாடகையை உயர்த்தி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

தமிழகம் முழுவதும் வாடகை இடத்தில் இயங்கும் குறு, சிறு தொழில் முனைவோர்களின் கட்டிடங்களின் வாடகைகள் உயர்த்தப்படும். மக்களின் நலன் கருதி அரசு சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in