

ஈரோடு: பால், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையேற்றம் காரணமாக, ஈரோட்டில் தேநீர் மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும், தனியார் பால் விலையும் அதிகரித்துள்ளது
இதன்காரணமாக, ஈரோட்டில் தேநீர் விலை ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும், காபி விலை ரூ.15-ல் இருந்து ரூ.17 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் கூறும்போது, ‘சமையல் எரிவாயு, பால், சர்க்கரை, தேநீர் தூள், காபி தூள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடந்த மூன்று மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், தேநீர், காபி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, தற்போதுதான் தொழில் நிலை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகவுள்ளது’ என்றனர்.