

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஆவின் பால் கெட்டுப் போன விவகாரத்தில், ஊழியர்கள் 10 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஆவினில் இருந்து கடந்த 28-ம் தேதி விற்பனைக்கு வைக்கப்பட்ட 18 ஆயிரத்து 973 லிட்டர் பால் கெட்டுப்போனது. இந்நிலையில், தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி ஆவினில் இருந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பால் கெட்டுப்போன விவகாரத்தில், உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் தரமற்ற பாலை தயாரித்து விற்பனைக்கு அனுமதித்த ஒன்றிய பணியாளர்கள் மேலாளர் (பொறியியல்), துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு), தொழில்நுட்ப பணியாளர் மற்றும் 7 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்கள் மீது ஒன்றிய விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணி நீக்கம்
இனிவரும் காலங்களில் எவ்வித தவறும் ஏற்படாத வண்ணம் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தவறு இழைத்தவர்களுக்கு உடந்தையாகவும், நிர்வாகத்துக்கு எதிராகவும் அவதூறு பரப்பும் செயல் களில் ஈடுபட்ட பணியாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் காலங்களிலும், தவறு இழைத்தாலோ, தவறு இழைப்பவர்களுக்கு துணையாக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட்டாலோ உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
கொள்முதல் பணம்
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் தற்போது, நாள் ஒன்றுக்கு 79,125 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், நாள் ஒன்றுக்கு 45,000 லிட்டர் பால் சென்னை இணையத்துக்கு அனுப்பப்படுகிறது. ஒன்றியத்தின் உள்ளூர் விற்பனைக்காக நாள் ஒன்றுக்கு 25,000 லிட்டர் பாலும், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துக்கு 6,500 லிட்டர் பாலும் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 1,10,000 லிட்டர் தரமான பாலை சங்க உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொள்முதல் செய்யப்படும் பால் உரிய நேரத்தில் பால் பண்ணை மற்றும் சிறு தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களுக்கும் அனுப்பி உரிய நேரத்தில் குளிரூட்டவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு வாரம் ஒரு முறை பால் கொள்முதல் பணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.