

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சீட்டணாஞ்சேரி கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி சமேத காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 82 ஆண்டுகளுக்குப் பிறகு நன்கொடையாளர்கள் நிதி உதவி மூலம் ரூ.80 லட்சம் செலவில், புதிதாகத் திருத்தேர் செய்யப்பட்டது.
இந்நிலையில், திருத்தேருக்கு நேற்று காலையில் சிவாச்சாரியார்கள் மூலம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று திருத்தேரை வடம்பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதற்காகக் கடந்த நிதிநிலை அறிக்கை மற்றும் தற்போது என ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், கோயில்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் கோயில் அறங்காவலர் குழுவில் இணைத்துக் கொள்வோம். இந்து சமய அறநிலையத் துறை சார்பில், குறைகள், பதிவேடுகள் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியில் பதிவாகும் குறைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டுத் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.