Published : 04 Apr 2022 05:52 AM
Last Updated : 04 Apr 2022 05:52 AM
கடலூர்: கடலூர் அருகே உள்ள இரண்டாயிரம்விளாகம் கலையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் திலகவதி (50). இருவருக்கு திருமணம் ஆகவில்லை. தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் இவர் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று காலை சிலிண்டர் அடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு திடீரென தீ பரவியது.
திலகவதி அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தார். அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டின் முன்பகுதி முழுவதும் இடிந்து தரைமட்டமாகி பொருட்கள் வெளியில் சிதறின. திலகவதிக்கு காயம் ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
தீ மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்த திலகவதியை மீட்டு தீயணைப்புத் துறை வாகனத்தில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து தூக்க ணாம்பாக்கம் போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT