

விருதாச்சலம் மற்றும் சேலத்தில் நடந்த அதிமுக பிரச்சார பொதுக் கூட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் துறை தகவல் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
விருதாச்சலம், சேலத்தில் நடந்த அதிமுக கூட்டங்களில் பங்கேற்றவர்கள் இறந்தது தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளித்துள்ளோம். அதேபோல் பகல் 12 மணி முதல் 3 மணிவரை நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக வந்த செய்திகளையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் தர்மபுரி தொகுதியில் இருப்பதாக கூறியுள்ளார். அவர்கள் இது தொடர்பாக பட்டியல் அளித்தால், முகவரியில் இல்லாதவர்கள், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் தொடர்பான பட்டியலில் வைக்கப்படும்.
நடவடிக்கை
தமிழக தேர்தல் பணிக்காக 122 பொதுப் பார்வையாளர்கள், 32 காவல்துறை பார்வையாளர்கள் வரும் 29-ம் தேதி தமிழகம் வருகின்றனர். தேர்தல் பணிகளில் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளை பயன்படுத்துவது தொடர்பாக அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவெடுப்பார். அதே நேரம் தேர்தல் பணிகளுக்கு வரமாட்டேன் எனக் கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்லும் அரசுப் பணியாளர்கள், 3 நாட்கள் பயிற்சி மற்றும் தேர்தல் பணியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியாளர்களுக்கான உணவை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பணியாளர்கள் பணம் கொடுத்து உணவைப் பெறலாம்.
5,916 குழுக்கள்
வாக்குப்பதிவு இயந்திரத்தை சாவடிக்குக் கொண்டு செல்லுதல், திருப்பி எடுத்து வந்து எண்ணும் மையத்தில் வைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 916 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு 7 அல்லது 8 குழுக்கள் இப்பணியில் ஈடுபடும். ஒரு துணை தாசில்தார் தலைமையில், அரசு ஊழியர்கள் 3 பேர், 5 போலீஸார் உள்ளிட்டவர்கள் இக்குழுவில் இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.